வெளியாகியது "தளபதி 67" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணைகிறது…
நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியது. இந்தப் படத்தில் விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் தொடர்ந்து ஆக்சன், காதல் என பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். அவர் நடித்த ஏராளமான படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன.
ஆண்டுக்கு குறைந்தது இரண்டு படங்களையாவது வெளியிடுவதில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் இதுவரை 66 படங்களை நடித்துள்ளார். அவர் நடித்து பொங்கலுக்கு வெளியான 66 ஆவது படம் வாரிசு கலவையான விமர்சனத்தை பெற்றது.
வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார்? இசையமைப்பாளர் யார்? நடிகர், நடிகைகள் யார்? என்ற விவரம் ஏதும் தெரியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பெயரிடப்படாத படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. தளபதி- 67 என குறிப்பிடப்பட்டுள்ள அந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
தளபதி 67 என்ற படத்தை 7 கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். அன்பறிவு சண்டை பயிற்சி கவனிக்கின்றனர்.
பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார். சதீஷ்குமார் கலையை கவனிக்கிறார். தினேஷ் மாஸ்டர் நடனத்தை கவனிக்கிறார். லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஜெகதீஷ் பழனிசாமி இணைகிறார். இந்த படத்துக்கான முதல் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கிவிட்டது.
தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறும். நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மாஸ்டர் என்ற மாபெரும் வெற்றி படத்துக்கு பிறகு இந்த படத்தில் இணைகிறது. நடிகர் விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான அசுரவதம் படத்தை தயாரித்த 7 ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம் தொடர்ந்து, மாஸ்டர், சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல இரண்டு காதல், கோப்ரா ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி 67 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான தலைப்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நடிகர், நடிகைகள் குறித்த விவரமும் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.