அமலாக்க துறை பிடியில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனான விஜய் தேவரகொண்டாவுக்கு, 'லைகர்' திரைப்படம் தோல்வியோடு சிக்கலையும் அளித்துள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி உலகமெங்கும் வெள்ளித் திரையில் வெளியானது. பான் இந்தியா திரைப் படமாக வெளியான 'லைகர்' எதிர்பார்த்த வெற்றியை அளிக்காமல் மிக மோசமான விமர்சனங்களால் படுதோல்வியடைந்தது. இது, நடிகர் விஜய் தேவரகொண்டாவையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
'லைகர்' திரைப்படத்தின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர் பணமோசடி புகாரில் சிக்கியுள்ளது டோலிவுட்டில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
தெலுங்குத் திரையுலகில் 'அர்ஜுன் ரெட்டி' திரைப் படம் மூலம் லைம் லைட்டில் வந்த நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது, 'குஷி' திரைப் படத்தில் நடிகை சமந்தாவுடன் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்திருந்த 'லைகர்' ஆக.25-ம் தேதி பான் இந்தியா திரைப் படமாக திரையரங்குகளில் வெளியானது. பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாக உருவான இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை அனன்யா பாண்டே, நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க, வில்லன் கதா பாத்திரத்தில் பிரபல குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் நடித்திருந்தார். இத்தனை முக்கியத்துவம் இருந்தும் 'லைகர்' திரைப் படம் நெகட்டிவ்வான விமர்சனங்களால் ரசிகர்களிடம் எதிர்மறை தாக்குதலுக்குள்ளானது.
ஏற்கெனவே, 'லைகர்' திரைப் படம் வெளியாகும் முன்னர் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருக்கு எதிராக நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததுடன், 'லைகர்' திரைப் படத்தையும் பாய்காட் செய்து திரையரங்குகளில் இருந்து விரட்டி அடித்தனர். இந்தநிலையில், தற்போது 'லைகர்' திரைப் படத்தின் தயாரிப்புக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற புதிய சிக்கலில் படக்குழு சிக்கியுள்ளது. 'லைகர்' திரைப் படத்தைத் தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அத்துடன், 'லைகர்' திரைப் படத்தின் தயாரிப்புக்காகத் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் சிலர் முதலீடு செய்துள்ளதாக பக்கா ஜட்சன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், FEMA எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி கவுரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவும் விசாரணைக்கு ஆஜாராகியுள்ளார்.
மைக் டைசன் உட்பட தொழில்நுட்பக் குழுவினருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்தும் திரைப் படத்திற்கான 125 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கான தரவுகள் பற்றியும் விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்தத் திரைப் படத்தின் மெகா ஷூட்டிங் லாஸ் வேகாஸில் நடைபெற்றது குறித்தும் அதிகாரிகள் விசாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பூரி ஜெகநாத்தும் சார்மி கவுரும் கடந்த வியாழக்கிழமை ஆஜராகி, 12 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கம் கொடுத்தனர்.
இந்தநிலையில், தற்போது இவர்களுடன் 'லைகர்' திரைப் படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டாவும் அமலாக்க துறை அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளது, தெலுங்குத் திரையுலகில் கூடுதலான பரபரப்பைத் தொற்ற வைத்துள்ளது. இதனால், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் முன்னெடுப்பில் ஏதேனும் தொய்வு ஏற்படுமோ என்பதுதான் அவரது ரசிகர்களின் கவலையாக உள்ளது.