சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இன்று..!

மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன் மிக்கவராக விளங்கும் நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Update: 2021-07-23 04:56 GMT

நடிகர் சூர்யா பிறந்த நாள்

நடிகர் சூர்யா இன்று தன்னுடைய 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்


திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன் " புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11 ம் தேதி 2006 ம் ஆண்டு மணந்து கொண்டார். இவர்களுக்கு ஓர் பெண்குழந்தை 2007 ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதி பிறந்தது.

சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006 ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.

இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.

அகரம் எனும் பெயரில் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.


நடிகர் சூர்யா பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.

தமிழ் சினிமாவில் சரவணன் என்கிற பெயரில் ஏற்கனவே நடிகர்கள் இருந்ததால் இயக்குநர் மணிரத்தினம் சரவணனுக்கு தனக்கு பிடித்த 'சூர்யா' என்கிற பெயரை வைத்தார். தனது தந்தையின் நடிப்பை பார்த்து சினிமா மீது காதல் கொண்ட சூர்யா 1997ஆம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். நடிகரின் மகனாக இருந்தாலும் குழந்தை நட்சத்திரமாக எந்தப் படத்திலும் சூர்யா நடிக்கவில்லை.

'ஆசை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அதனை ஏற்க மறுத்துவிட்டார். மணிரத்தினம் இயக்கிய இந்தி திரைப்படமான 'குரு' திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் அந்தப் படத்தின் நாயகன் அபிஷேக் பச்சனுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். சூர்யாவிற்கு பிடித்தமான நபர்களுள் முக்கிய இடம் நடிகர் கமல்ஹாசனுக்கு உண்டு. தன்னுடைய தந்தையின் பேச்சை தட்டாமல் கேட்கும் பழக்கம் கொண்டவர் சூர்யா. சிவக்குமார் சொல்கிற அறிவுரைகளை அப்படியே பின்பற்றுவது இவர் வழக்கம். தன் தந்தை கற்றுக் கொடுத்த 'இதுவும் கடந்து போகும்' என்கிற வாக்கை பின்பற்றுபவர்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு சூர்யா முதன்முதலில் கார்மெட்ன்ஸில் பணிக்கு சேர்ந்தார். அங்கு சம்பாதித்த 1200 ரூபாயில் தன் அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தார். சூர்யாவின் படங்களில் முதன்முதலில் 100கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய திரைப்படம் 'சிங்கம்2'. இயக்குநர் ஆக வேண்டும் என்பது இவருடைய நீண்ட நாள் கனவு. சின்னத்திரையில் 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி' என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.

படிக்க வசதியின்றி தவிக்கும் ஏழை மாணவர்களுக்காக 'அகரம்' என்கிற அறக்கட்டளை நிறுவி பல குழந்தைகளின் கல்விக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை விரும்பும் சூர்யா தன் குடும்பத்தினருடன் 'லட்சுமி இல்லம்' என்கிற தன் தாயின் பெயரில் கட்டப்பட்ட வீட்டிலேயே வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோதிகா நடித்த திரைப்படம் '36 வயதினிலே'. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யாதான்.

தன் மனதுக்கு சரியென்று தோன்றுவதை பேச சூர்யா எப்போதும் பயந்ததில்லை. 'புதிய கல்விக் கொள்கை', 'நீட் பிரச்னை' என பல பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஜோதிகா ஒரு மேடையில் கோவிலுக்கு பணம் கொடுப்பதை விட மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் பணம் கொடுங்கள் அதுதான் முக்கியம் என பேசினார். அந்தப் பேச்சுக்கு சிலர் கண்டனங்கள் தெரிவித்தனர். அப்போதும் தன் மனைவி பேசியது சரி என்று அவருக்கு பக்கபலமாக இருந்தார் சூர்யா.


சூர்யா விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. அந்த விளம்பரப்படங்களில் கிடைக்கும் பணத்தை தன்னுடைய அகரம் பவுண்டேஷனில் உள்ள குழந்தைகளின் படிப்பிற்காகவே செலவிடுகிறார். தன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சியை கூட தவற விடமாட்டார். தான் சோர்ந்து போகும் சமயங்களில் 'பாரதியார் கவிதைகள்' வாசிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

தனது குழந்தைகளின் பெயர்களான தியா, தேவ் என்பதை '2 டி' என மாற்றி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியுள்ளார். இவருடைய நடிப்பிற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. ஆனாலும், அதனை பெரியதாக எண்ணாமல் பல பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்த விரும்புபவர். அதற்கு பேரழகன் திரைப்படமே சாட்சி!

Tags:    

Similar News