ரஜினிக்கு ஏவிஎம்… சிம்புவுக்கு ஜீவிஎம்..!
நடிகர் ரஜினிக்கு ஏவிஎம் என்கிற மூன்றெழுத்து எப்படி ராசியானதோ, அதுபோல் சிம்புவுக்கும் ஜீவிஎம் எனும் மூன்றெழுத்து ராசி.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்(ஜீவிஎம்) இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' பாசிட்டிவ்வான வரவேற்பைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. பத்திரிகை, ஊடகங்கள், திரையுலகப் பிரமுகர்கள் என அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு வார்த்தைகளைப் பெற்று வருகிறது.
இந்தநிலையில், இயக்குநர் டி.ராஜேந்தர், பேட்டியொன்றில், ''ரஜினிக்கு ஏ.வி.எம் என்ற மூன்றெழுத்து எப்படி ராசியோ அதுபோல சிம்புவிற்கு ஜீ.வி.எம் என்ற மூன்றெழுத்து ராசி. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களைத் தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படமும் சிறப்பாக வந்துள்ளது'' என்று கூறியுள்ளார். இப்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படத்தினுடைய இரண்டாம் பாகத்தினை விரைவாக எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு மீண்டும் ஒரு படம் பணிபுரியலாம் என்று முடிவெடுத்தபோது 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்றுதான் தொடங்கியுள்ளனர். ஆனால், இடையில் லாக் டவுன் வந்து காலதாமதமானது. அப்போது கார்த்திக் டயல் செய்த எண் என்று வி.டி.வி கதாபாத்திரங்களை வைத்து ஒரு குறும்படத்தை வீட்டில் இருந்தபடியே எடுத்து வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர், 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்கிற காதல் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்கள். அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து பதிவும் செய்துவிட்டாராம். இந்த சூழலில்தான் 'வெந்து தணிந்தது காடு' உருவானதாம்.