முதலமைச்சர்.ஸ்டாலினிடம் நேரில் நன்றி சொன்ன நடிகர் ராஜேஷ்..!
முதலமைச்சர்..ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது நன்றியையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொண்டார்.
அண்மையில், தமிழ்த் திரைப்பட நடிகரான ராஜேஷை தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்த நியமனம் குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பல தரப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன.
இவ்வாறான நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும், திரைப்படத் துணைப்பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே இந்த நிறுவனத்தின் முக்கிய இலக்காகும்.
தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிறுவனம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராஜேஷ், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர். அதோடு, திரைப்படம் தொடர்பான பல்வேறு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இந்தநிலையில், நடிகர் ராஜேஷ், நேற்று முதலைமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு தனது அளப்பரிய நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.