'ராக்கெட்ரி' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமெடுக்கும் நடிகர் ஆர்.மாதவன்..!

நடிகர் ஆர்.மாதவன், 'ராக்கெட்ரி' படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்வே இப்படத்தின் கதை.

Update: 2022-06-23 16:00 GMT

இயக்குநர் மணிரத்னத்தால் தமிழ்த்திரையுலகில் நாயகனாக அறிமுகமான நடிகர் ஆர்.மாதவன், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தமிழின் மிக முக்கிய இயக்குநர்களோடு கைகோர்த்து தன் சிறந்த நடிப்பால், முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

இந்தநிலையில், தற்போது இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானியான ஸ்ரீநம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'ராக்கெட்ரி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஆர்.மாதவன்.

அண்மையில், நடிகரும், இயக்குநருமான ஆர்.மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து படத்தை உருவாக்கியது குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த சந்திப்பில் பேசிய நடிகர் ஆர்.மாதவன், "இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்கக்கூறி எனது நண்பர் ஒருவர்தான் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு தேசிய ரகசியத்தைத் தெரிவித்ததாக, பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு, தான் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

நம்பி நாராயணனை நான் சந்தித்த அந்தத்தருணம், என் வாழ்க்கையின் பரிமாணத்தையே மாற்றியது. சரியாகச் சொல்வதானால், நம்பி நாராயணனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த மாதவன், பின்பு இருந்த மாதவன் என என் வாழ்க்கையை நானே வகைப்படுத்துவேன்.

அவர் இந்தியாவின் அறிவார்ந்த மனிதர்களில் ஒருவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் அவரைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்து ஒரு உணர்வுபூர்மான ஒளியை என்னால் காண முடிந்தது. அவரது உதடுகள் கோபத்தாலும், கவலையாலும் நடுங்கின. அதில் பேசுவதற்கு நிறைய இருந்தது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூரத் தொடங்கியபோது, அவர் கொந்தளித்தது என்னை ஒரு கணம் உலுக்கியெடுத்தது.

"ஐயா, கடந்த காலங்கள் இருக்கட்டும். அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை" என்று அவரை ஆற்றுப்படுத்தினேன்.

ஆனால் அவர், "ஆம், நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் மற்றும் காவல் துறையால் நிரூபிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், நீங்கள் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் 'ஸ்பை' என குறியிடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது, அது மீள முடியாததாகவே உள்ளது" என்று குரலுடைந்து கூறினார். அதுதான் எனக்கு அவரைப் பற்றிய ஸ்கிரிப்ட் எழுதும் ஆர்வத்தை உடனடியாக எனக்குள் ஏற்படுத்தியது.

நம்பி நாராயணன் போன்றவர்களின் காவிய வாழ்க்கையைப் பற்றி தேசமும், உலகமும் அறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதனால்தான் நான் இந்த 'ராக்கெட்ரி' படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்" என்றார் நடிகர் ஆர்.மாதவன்.

வரும் ஜூலை 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பன்மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து ஆர்.மாதவன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் 'ராக்கெட்ரி'யில் நடித்துள்ளனர்.

Tags:    

Similar News