'ஆயிரத்தில் ஒருவன்-2' - சோழ மன்னனாக நடிகர் தனுஷ்..!
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்-2' படத்தில் நடிகர் தனுஷ் சோழ மன்னனாக நடிக்கவிருக்கிறாராம்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம், 'ஆயிரத்தில் ஒருவன்'. இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாகவும் நடிகைகள் ரீமா சென், ஆன்ட்ரியா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருந்தனர். மேலும், நடிகர் பார்த்திபன், நடிகர் பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருந்தனர். படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
பாண்டிய அரசக் குடும்பத்தின் எச்சமான ரீமா சென், சோழர்களை அழிக்கும் வகையில் காய் நகர்த்துவதாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. மிகவும் பிரமாண்டமான இந்தக் கதையை ரசிகர்கள் கொண்டாடத் தவறிவிட்டனர் என்பதுதான் முக்கியமான ஒன்றாகும். ஆனாலும், இதுவரை இந்தப் படம் சிறப்பான வரவேற்பைத்தான் விமர்சனங்களாகப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் பிரமாண்டம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பைத் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தை செல்வராகவன் விரைவில் இயக்கவுள்ளதாகவும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பிற்கான அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது, இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் புரமோஷனின்போது பேசியுள்ள நடிகர் பார்த்திபன், விரைவில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் படத்தில் சோழ மன்னனாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 'ஆயிரத்தில் ஒருவன்-2' குறித்த அவரது இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ளவைத்துள்ளது.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல் பாகத்தில் சோழ மன்னனாக நடிகர் பார்த்திபன் நடித்திருப்பார். படத்தில் செல்வவளம் குன்றி, பண்பாட்டுக் கூறுகளை முற்றிலும் இழந்தவர்களாக சோழர்கள் காட்டப்படுவார்கள். இறுதியில் அவர்கள் அனைவரும் இறப்பதாகக் காட்டப்படும் நிலையில், ஒரு குழந்தையை நடிகர் கார்த்தி தூக்கிச் செல்வார். அந்தக் குழந்தைதான் பிற்காலச் சோழன். தற்போது அந்தக் குழந்தையின் கதாபாத்திரத்தில்தான் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.
பொன்னியின் செல்வன் படம் நல்ல வசூல் செய்துவரும் இந்த சூழலில் வரலாற்றுப் படங்களுக்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்பது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதுகின்றனர். பாகுபலி கற்பனை கலந்த வரலாற்றுப் படம் என்றாலும் அதன் நேர்த்தியான திரைக்கதை, இயக்கம் மற்றும் தரமான தயாரிப்பு வெற்றிக்கான பாதையை உயர்த்திப்பிடித்தது.
அதேபோல கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுப்பதற்காக எம்.ஜி.ஆர் அந்த கதைக்கான உரிமத்தை வாங்கி வைத்திருந்ததாகவும் தெரிகிறது. பின்னர் எம்.ஜிஆரிடம் இருந்து கமல் வாங்கி அவரும் இயக்குவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால், தவிர்க்கமுடியாத சூழலில் அவராலும் நிறைவேற்றமுடியவில்லை. தற்போது அதை இயக்குனர் மணிரத்தினம் நிறைவேற்றியுள்ளார். அந்த படமும் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் செல்வராகவன் தனது அடுத்த வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ளார். அதில் அவரது சகோதரர் தனுஷை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.