மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் நடிகர் தனுஷ்: திரையுலகில் பரபரப்பு
நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக நேற்றிரவு அறிவித்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவரை, நடிகர் தனுஷ் காதலித்து, 2004 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை, பலரும் முன்னுதாரணமாக குறிப்பிடுவதுண்டு.
இந்த நிலையில், நேற்றிரவு நடிகர் தனுஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதில், "நாங்கள், 18 ஆண்டுகளாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவொருக்கொருவர் நலம் விரும்பிகளாக நாங்கள் ஒன்றாக பயணித்தோம். இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகவே இருந்து வந்தது. இன்று நாங்கள் எங்களுடைய பாதையில் தனித்தனியே பிரிந்து செல்லவேண்டிய இடத்தில் நிற்கிறோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் நடிகர் விஜய், அஜீத்திற்கு பிறகு முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் திரைப்படங்கள் தவிர இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நடிகர் தனுஷ் அறிவித்திருப்பது, ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, ஐஸ்வர்யா தரப்பிலும் இதேபோல் அறிக்கை வெளியாகி இருக்கிறது.