ஐந்து விருதுகளை அள்ளிய மகிழ்ச்சி… 'சூரரைப்போற்று' குழுவினர் தியேட்டரில் கொண்டாட்டம்..!

'சூரரைப்போற்று' படம் ஐந்து தேசிய விருதுளைப் பெற்றதை இயக்குர் சுதா கொங்கரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் தியேட்டரில் கொண்டாடினர்.;

Update: 2022-07-24 05:21 GMT

ஒரு படம் ஆஸ்கர் போட்டிக்கு போகிறது என்பதே நற்தகுதிக்கான முதற் சான்று. அதன்பிறகு, போட்டியில் ஒரு சில சுற்றுகள் முன்னேறும்போதே சம்பந்தப்பட்ட படம் தொடர்பானவர்களுக்கு உற்சாக ஊற்றைத் தோற்றுவிக்கும். அவ்வகையில், 'சூரரைப்போற்று' படம் ஆஸ்கர் போட்டிக்கு சென்று சில சுற்றுகள் முன்னேறிய நிலையில், அதன் பின்னர் முன்னேற முடியாமல் பின்வாங்கியபோதே, இப்படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு படக்குழுவினர் மட்டுமின்றி, திரையுலகினர் மத்தியிலும் எழுந்தது.

ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், ஐந்து தேசிய விருதுகளை அள்ளி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம்.

சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா, சிறந்த திரைப்படம் என பெற்ற 5 விருதுகள் விருதுக்கானவர்களை மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரையும் ஆனந்தமாக்கியது.

இந்தநிலையில், நடிகர் சூர்யா பிறந்தநாளான நேற்று(23/07/2022) 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' திரைப்படங்கள் ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு திரையிடலாக வெளியானது. ஏற்கெனவே, இவ்விரு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சிறப்புத் திரையிடலில் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சிலர் பங்கேற்றனர். பின்னர், விருது பெற்றதை முன்னிட்டு தியேட்டரிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

மேலும், 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கில் பிஸியாக இருந்தாலும் இந்த மகிழ்வுக்கொண்டாட்டத்துக்கு நேரம் ஒதுக்கி வந்து கலந்துகொண்டாராம் இயக்குநர் சுதா கொங்கரா.

Tags:    

Similar News