உள்ளாட்சி தேர்தலில் ஓங்குவது யார் கை? இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில், இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை தொடங்குகிறது.

Update: 2021-10-12 01:45 GMT

தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதன்படி, மொத்தம் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

மொத்தம், 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலில், 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. எனவே, வேட்பாளர்கள், ஏஜென்டு முன்னிலையில் பதிவான வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டு, அவற்றை 50 சீட்டுகளாக பிரித்து கட்டி, எண்ணப்படும்.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால், இதற்கான தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ண தொடங்கிய சில மணி நேரத்தில் இருந்து தெரிய வரலாம். ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி, மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை  முடிந்து, தேர்தல் முடிவு வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று தெரிகிறது.

அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News