மின்சார வாகனங்களை இறக்கும் ஃபோர்டு! அசத்தல்...!
ஃபோர்டு மீண்டும் வருகிறதா? இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் களமிறங்குகிறதா?
இந்தியாவில் இருந்து வெளியேறிய அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான போர்டு, இந்தியாவுக்கு மின்சார மற்றும் ஹைப்ரிட் கார்களைத் தயாரித்து, மறுபடியும் சந்தையில் களமிறங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சந்தையில் மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், சென்னை அருகே உள்ள தொழிற்சாலையைப் பயன்படுத்தி மீண்டும் இந்தியாவில் களமிறங்க நினைப்பதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்சார வாகனங்களின் விற்பனை மந்தம்
மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த சில காலமாக குறைந்துள்ளதற்கு, அதன் அதிகப்படியான விலையும், போதிய சார்ஜிங் வசதிகள் இல்லாததுமே முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பெரும்பாலான நுகர்வோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மின்சார வாகனங்களைப் புறக்கணித்து ஹைப்ரிட் வாகனங்களை நோக்கி போர்டு
எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வத்தில் பின்னடைவை சந்தித்துள்ள போர்ட் நிறுவனம், அதன் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது. அதன் முக்கிய முடிவாக, பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைப்ரிட் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மின்சாரத்தில் இயங்கும் மஸ்டாங் மேக்-இ (Mustang Mach-E) கார்களின் உற்பத்தி மற்றும் விலையைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்சார டிரக்குடன் வந்த சிக்கல்
சமீபத்தில், எஃப்-150 லைட்னிங் (F -150 Lightning) என்ற மின்சாரத்தில் இயங்கக்கூடிய டிரக்கில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. பின்னர், விற்பனையில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அந்த மாடலின் உற்பத்தியை, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட சில வாரங்களிலேயே நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வாகன உற்பத்தி தடை
பிப்ரவரி 9-ஆம் தேதி தங்கள் நிறுவனத்தின் எஃப்-150 லைட்னிங் டிரக்குகளுக்கான விநியோகத்தை நிறுத்தி வைத்திருப்பதாக போர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன்மூலம் மின்சார வாகன உற்பத்தியில் தரம் குறித்த தீவிர கவனம் செலுத்தி வருவதை போர்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான எதிர்காலம்
இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை ஆண்டுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரிக்கும் எனவும், 2032-ஆம் ஆண்டில் 27.2 மில்லியன் அலகுகள் விற்பனையாகக் கூடும் எனவும், எரிசக்தி ஆலோசனை, மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனமான கஸ்டமைஸ்டு எனர்ஜி சொல்யூஷன்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள 'இந்தியா எலக்ட்ரிக் வெஹிக்கிள் மார்க்கெட் ஓவர்வியூ 2023' அறிக்கை தெரிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சார வாகன விற்பனை 1.7 மில்லியன் அலகுகளை எட்டும். 2023-ஆம் ஆண்டு முதல் 2032-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மின்சார வாகன விற்பனை ஆண்டுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்து, 2032-ஆம் ஆண்டிற்குள் 27.2 மில்லியன் அலகுகள் விற்பனையாகக் கூடும் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் 3.5 பில்லியன் டாலர் மானியம்
உள்நாட்டில் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை (EV ecosystem) உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதற்கு அடையாளமாக, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பிற்காக 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2,91,000 கோடி ரூபாய்) உற்பத்தி-சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு (PLI) ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவில் மின்சார வாகன விநியோகச் சங்கிலியை (EV supply chain) மேம்படுத்துவதற்கு உதவும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.