போர்டு (Ford) கார் தொழிற்சாலை மீண்டும் சென்னைக்கு வரப்போகுதாம்ங்கோ..!

ஃபோர்டு சென்னையை விட்டு வெளியே போனபோது, இந்தியாவே அழுதது.

Update: 2024-08-06 08:23 GMT

போர்டு மஸ்டாங் 

ஃபோர்டு கார் சென்னையைவிட்டு வெளியேறியதால் ஊழியர்கள் அனைவரும் நிர்க்கதியானார்கள். இப்போது திரும்பவும் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்தி வந்துள்ளது. ஆம், ஃபோர்டு தனது சேவையை மீண்டும் தொடங்கப் போகிறது என்று தகவல். அதுவும் உலகப் புகழ்பெற்ற மஸ்டாங் எனும் ஸ்போர்ட்ஸ் காரின் மூலம் தான் மீண்டும் என்ட்ரி கொடுக்கப் போவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது, மறைமலைநகரில் மூடப்பட்ட அதே தொழிற்சாலையில் மீண்டும் முதலீடு செய்யப் போகிறதாம் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம். இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில், தமிழக தொழில்துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை முடியும் தருவாயில் இருக்கிறதாம்.

அதுவும் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட புது எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையால் மிகவும் கவரப்பட்டு விட்டது ஃபோர்டு. அதாவது, நம் உள்ளூரில் சுமார் 4,150 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்தால், அந்த நிறுவனங்களின் கார்களுக்கு இறக்குமதி வரியை 15% வரை குறைத்து அறிவித்திருந்தது நம் மத்திய அரசு. அதன்படி பார்த்தால், உதாரணத்துக்கு டெஸ்லாவின் விலை குறைந்த மாடலான, 33 லட்ச ரூபாய் விலை கொண்ட மாடல் 3-யை நம் ஊரில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 65 லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருந்த நிலையில், 37 லட்சத்துக்குள் இதை வாங்கி விடலாம். மற்ற வெளிநாட்டுக் கார்களுக்கும் இது பொருந்தும்.

இது ஃபோர்டுக்கும் பிடித்திருக்கிறது. அதனால் ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் பிரசிடென்ட் Kay Hart, தமிழ்நாடு அதிகாரிகளைச் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்திருந்தார். இப்போது மீண்டும் சந்திப்பு நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டபோது, முதலில் டாடா வாங்குவதாக இருந்தது. டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் ஒரு பெர்சனல் சந்திப்பு நடத்தினார். ஆனால் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலையை வாங்கி விட்டது டாடா. அதன் பிறகு ஃபோர்டு கம்பெனி இடம் ரியல் எஸ்டேட் ஆகப் போகிறது, சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் வாங்கப் போகிறது, JSW-MG குழுமம் கைப்பற்றப் போகிறது என்று பல செய்திகள். எல்லாம் கடைசிக் கட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இப்போது அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் காரான மஸ்டாங் Mach-E காரின் டிரேட்மார்க்கைப் பதிவு செய்துள்ளதாம் ஃபோர்டு. இது நம் ஊரில் தயாரிக்கப்பட்டால், ஏகப்பட்ட இன்ஜீனியர்ஸுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை CBU (Completely Built Unit) வழியில் அமெரிக்காவில் இறக்குமதி செய்து ஃபோர்டு தனது தொழிலைத் தொடங்கினாலும் சரி; நம் மத்திய அரசின் புது எலெக்ட்ரிக் வாகன பாலிசி ஃபோர்டுக்கு மிகவும் கைகொடுக்கும்.

இதைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களை லோக்கலைஸ் செய்வது பற்றியும் யோசனையில் இருக்கிறது ஃபோர்டு. மஸ்டாங் மேக்-இ காரைத் தொடர்ந்து, ஃபோர்டுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த எண்டேவர் காரும் நம் ஊரிலேயே உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்யப்படலாம் என்கிறார்கள். ஆனால் இது எவரெஸ்ட் என்கிற பெயரில் வருமா… அல்லது அதே எண்டேவர் என்கிற அதே பெயரில் வருமா என்று தெரியவில்லை. தாய்லாந்தில் எவரெஸ்ட் எஸ்யூவி சக்கைப் போடு போடும் கார்.

போன மார்ச் மாதம் - ஃபோர்டின் CEO ஜிம் ஃபேர்லி, ஃபோர்டு இன்ஜீனியர்கள் இந்தியாவுக்கு ஏற்ற விலை குறைந்த எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்ம்களில் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார். இதன் மூலம் சென்னையில் திரும்பவும் 2,500 முதல் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி என்றும் சொல்லப்பட்டது.

அட, எண்டேவரோ - மஸ்டாங்கோ - திரும்பவும் ஃபோர்டு லோகோ கொண்ட கார்களைத் தமிழ்நாட்டில் பார்ப்பது எம்புட்டு ஆனந்தமாக இருக்கும். இன்ஜீனியர்ஸ்… ஃபோர்டு ஃபேக்டரிக்குப் படையெடுக்க ரெடியா இருங்க.

Tags:    

Similar News