கலர்கலராய் மாறும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்
பட்டனை அழுத்தினாலே நிறத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய தொழிற்நுட்பத்துடன் புதிய எலக்ட்ரிக் காரினை பிஎம்டபிள்யூ உருவாக்கியுள்ளது;
லட்சக்கணக்கில் பணம் போட்டு காரை வாங்கி, அதை ஒரே நிறத்தில் பயன்படுத்தி வருவது சிலருக்கு ஒரு கட்டத்தின் மேல் சலிப்பு ஏற்பட்டுவிடும். அதைவிட இன்னொருவர் கார்கலர் நன்றாக இருந்தால், சிலர் காரின் நிறத்தை புதிய வ்ராப்-ஆல் மாற்றுவது உண்டு. ஆனால் ஒரு பட்டனை அழுத்தினாலே நிறத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய தொழிற்நுட்பத்துடன் புதிய எலக்ட்ரிக் காரினை பிஎம்டபிள்யூ உருவாக்கியுள்ளது.
ஐஎக்ஸ் எம்60 என பெயர் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 2022 நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க தொழிற்நுட்பத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம்-பிராண்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
ஐஎக்ஸ் எம்60 காரின் மூலமாக இந்த வெளிப்புற பெயிண்ட்டை மாற்றும் தொழிற்நுட்பத்தையும் பார்வையாளர்கள் முன்பு பிஎம்டபிள்யூ காட்சிப்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அடர் க்ரே நிறத்தில் காட்சியளித்த கார் பின்னர் வெள்ளை நிறத்திற்கு மாறுகிறது. பிஎம்டபிள்யூவின் இந்த பெயிண்ட்-மாற்று தொழிற்நுட்பமானது இ-பேப்பர் மூலமாக செயல்படுகிறது.
இ-ரீடர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? கிட்டத்தட்ட இதே போன்றதுதான் இந்த தொழில்நுட்பமும். இருப்பினும் இந்த தொழிற்நுட்பம் இன்னமும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஃப்ளோ என்ற பெயரில் கான்செப்ட் வெர்சனாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தொழிற்நுட்பத்தை, இ இன்க் உடன் காரின் மேற்பரப்பு பூச்சு மனித முடியின் அளவு விட்டம் கொண்ட லட்சக்கணக்கான மைக்ரோ கேப்சூல்களை கொண்டுள்ளது.
இந்த மைக்ரோ கேப்சூல்கள் ஒவ்வொன்றிலும் நெகடிவ் சார்ஜ் செய்யப்பட்ட வெள்ளை நிறமிகள் மற்றும் பாசிடிவ் சார்ஜ் செய்யப்பட்ட கருப்பு நிறமிகள் உள்ளன.
இந்த தொழில்நுட்பம், எலக்ட்ரோஃபோரெடிக் வண்ணமயமாக்கல் என்று அழைக்கப்படுகிறது. இதன் உதவியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளமைவை பொறுத்து, மின்சார புலம் மூலம் காரின் மேற்பரப்பின் நிறத்தை மாற்றி கொள்ளலாம். ஏற்கனவே கூறியதுபோல், இந்த செயல்பாடுகள் அனைத்தும் வெறும் ஒரு பட்டனை தொடுவதின் மூலம் நடைபெறுகிறது.
ஆனால் இப்போதைக்கு காரின் வெளிப்புற நிறத்தை வெள்ளையில் இருந்து அடர் க்ரே நிறத்திற்குமே மாற்றி கொள்ள முடிகிறது.