வாணாபுரம்: மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்த கோரிக்கை
வாணாபுரம் பகுதிகளில் மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள சதாகுப்பம், வாழவச்சனூர், அகரம்பள்ளிபட்டு, தென்கரும்பலூர், கொட்டையூர், தலையாம்பள்ளம், நரியாபட்டு, தச்சம்பட்டு, கூடலூர், சேர்ப்பாபட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, உளுந்து, உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்று கரையோரப் பகுதி விவசாயிகள் பெரும்பாலும் மக்காச்சோள பயிரை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட நிலையில் தற்போது படைபுழு தாக்கத்தினால் வளர்ச்சி குன்றியும் பயிர்கள் முழுவதும் சேதம் ஏற்பட்டும் உள்ளது. இதனால் விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. படைபுழு தாக்கப்படுவதால் செடிகள் முழுவதும் வளர்ச்சியின்றி காணப்படுகிறது. மேலும் புழுக்கள் இலைகளை தின்று விடுகிறது. இதனால் பல ஆயிரம் செலவு செய்து நடவு செய்த பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு படை புழுவை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.