டீசல் விலை உயர்வால் பாதிப்பு: மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் வழங்க வேண்டும் என்று, விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்த்து, தமிழ்நாடு விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல்,டீசல் விலையினை ஏற்றிக் கொண்டே உள்ளன. இதனால் தமிழகத்தில் கிணறு மற்றும் போர்வெல் கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்காமல் உள்ள ஏராளமான விவசாயிகள், டீசல் இன்ஜினை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து விவசாயதோட்டங்களிலும், டிராக்டர்கள், நாற்று நடும் இயந்திரம், களையெடுக்கும் மெசின்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய கருவிகள், டீசலைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. அதிக விலை கொடுத்து டீசலை வாங்கி பயன்படுத்துவதால் விவசாயத்தில் உற்பத்தி செலவு மிக அதிகரித்து வருகிறது. டீசல் இன்ஜின் வைத்து விவசாயம் செய்பவர்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, டீசல் இன்ஜின்களை பயன்படுத்தும் விவசாயிகளை, அரசுத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுத்து, அந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், அவர்களுக்கென தனி அடையாள அட்டை வழங்கி, டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மட்டும், ஒரு லிட்டர் டீசலுக்கு மத்திய அரசும், மாநில அரசும் குறைந்தபட்சம் ரூ75 மானியம் அளிக்க வேண்டும். அதேபோல டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே இருப்பதால், டீசல் இன்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அல்லது, 100 சதவீத மானியத்துடன், சோலார் மின் மோட்டார் அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.