இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: ஆ.கேதீஸ்வரன்

இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: ஆ.கேதீஸ்வரன்
X
இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் பேட்டியளித்தார்.

இலங்கையில் தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் தீவிர கொரோனா தொற்று நிலையினை எதிர்கொள்வதற்காக வடக்கு மாகாணத்திலும் சுகாதாரப் பிரிவினரால் பல்வேறுபட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் முதல் கட்டமாக வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருகின்றோம். இந்த நிலையங்களில் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் இங்கே சிகிச்சைக்காக அனுமதிக்க படுவார்கள். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பகுதியில் இயங்கி வருகின்ற சிகிச்சை நிலையங்களும், மேலும் கிளிநொச்சியில் பாரதிபுரத்திலும், அதைப்போல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியிலும் புதிதாக சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அவை இயங்க ஆரம்பித்துள்ளன.

தற்போது கொரோனா நோயாளிகள் மற்றும் நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நிலைமையைப் பொறுத்து நாங்கள் இந்த கருத்தினை வெளியிடுகின்றோம். அத்துடன் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு சுவாசத் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவையும் உள்ளது. அந்த வகையிலே வடக்கு மாகாணத்திலும் மாவட்ட ரீதியில் வைத்தியசாலைகளை அதற்கு ஏற்றவாறு தயார்ப் படுத்தியுள்ளோம். நல்லமுறையில் சிகிச்சை அளிக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையில் ஒரு விடுதியினை இதற்கு ஏற்றவாறு தயார்படுத்தியுள்ளோம். அதாவது ஆண்களுக்கு ஒரு விடுதி, பெண்களுக்கு ஒரு விடுதி என வடக்கு மாகாணத்தில் இந்த ஏற்பாட்டினை ஏற்படுத்தியுள்ளோம். அதாவது நோய் அறிகுறியுடன் இனங்காணப்படும் தொற்றாளர்களை சிகிச்சை அளிக்க ஏற்றவாறு,

ஆக்சிஜன் தேவை படுவோர் மற்றும் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்காகவே இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளோம். அதேபோல தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாய்மாரை பராமரிக்கவென மாவட்டம் தோறும் அதற்கு தனியான ஒரு விடுதியினை சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம். அதாவது பிரசவ அறையுடன் கூடியதாக அந்த விடுதி தயார்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் அந்த விடுதி விஷேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற மாவட்டங்களிலும் ஒரு விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!