மதங்களை தாண்டிய மத நல்லிணக்க விழா

151 ஆண்டுகளாக தொடரும் சமூக ஒற்றுமையின் விழா
ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதி, நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியாகும். இங்கு பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, இந்தக் கோவிலின் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்வாக, கடந்த 151 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒன்றுகூடி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டும் வழக்கம்போல் தேர்த்திருவிழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிவசுப்பிரமணிய சுவாமியின் ஊர்வலம் நடந்தது. பின்னர், மத நல்லிணக்கத்திற்கான முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் விழா, ஊர் பெரிய தனக்காரர் தியாகராஜன் மற்றும் ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளிவாசல் தலைவர் உசேன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஊரின் மையத்தில் உள்ள மரத்தின் கீழ் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக திரண்டு, வெள்ளை கொடியை கொடிமரத்தில் ஏற்றி, அனைவருக்கும் நலம் வேண்டி துவா செய்து பிரார்த்தனை செய்தனர்.
விழாவில், தேங்காய் பழம், நாட்டு சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. பின்னர், இரு சமுதாயத்தினரும் ஒருவருக்கொருவர் பூமாலை அணிவித்து, ஆரத்தழுவி சந்தனம் பூசிக்கொண்டதுடன், வீடுகள்தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நல்லிணக்க விழாவின் பின்புலமாக, 150 ஆண்டுகளுக்கு முன் இக்கிராமத்தில் தேர்திருவிழா நடைபெற்றபோது ஏற்பட்ட கொல்லை நோயின் போது, முஸ்லிம்கள் கிராம மக்களுக்கு சேவை செய்து துவா செய்ததையே அடிப்படையாகக் கொண்டது. இதை நினைவுகூரும் வகையில், இவ்விழா இன்று வரை தொடர்ச்சியாக நடைபெற்று வருவது சமூக ஒற்றுமையின் நிழலாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu