100 நாள் வேலை திட்டத்தில் ஓடையை சுத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

100 நாள் வேலை திட்டத்தில் ஓடையை சுத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
X
மழைநீரை சேமிக்க, ஓடையில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

100 நாள் வேலை திட்டத்தில் ஓடையை சுத்தம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நாமகிரிப்பேட்டை யூனியன் பகுதியில் உள்ள பச்சுடையாம்பாளையம் பஞ்சாயத்தின் எல்லையை ஒட்டியவாறு கொல்லிமலை அடிவாரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஓசக்கரையான் ஊற்று, குருவாளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருகும் மழைநீர், சாலையோர ஓடையின் வழியாக பச்சுடையாம்பாளையம், பேளுக்குறிச்சி சாலை வழியாக தொப்பப்பட்டி வரை சென்று கொண்டிருக்கிறது. இந்த நீரோடையின் பேளுக்குறிச்சி சாலைக்கு கிழக்குப் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முட்புதர்கள் நீக்கப்பட்டு, தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் ஓடை சீரமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதே ஓடை பேளுக்குறிச்சி சாலையின் மேற்கு பகுதியில் காடாக மாறி காணப்படுகிறது. இந்த பகுதியில் நீரின் ஓட்டம் பாதிக்கப்படும் அளவுக்கு முட்கள், புதர்கள் தழைத்துள்ளன. மேலும், மழைநீர் செல்லும் பாதையில் பாலம் கட்டப்பட்டிருந்தாலும், அந்த பாலத்தை தாண்டி தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே ஓடையில் ஒரு பகுதி சுத்தமாகவும் மற்றொரு பகுதி பராமரிப்பின்றி தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மழைநீர் ஓட்டத்தை சீர்படுத்தும் வகையில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஓடையின் மேற்கு பகுதியில் உள்ள பகுதிகளையும் சுத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story