ஆம்பூர் நகராட்சியில் பித்தளை காசு வழங்கி சுயேச்சை வேட்பாளர் மோசடி
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போன்ற நகராட்சியில் வீட்டுக்கு வீடு, புடவை, ஜாக்கெட், மூக்குத்தி, அரிசி மூட்டை, மளிகை தொகுப்பு, பணம் ஆகியவற்றை அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வழங்கியதாக செய்திகள் வருகின்றன.
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36வது வார்ட்டில் அதிமுக-திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் தாமரைச்செல்வி, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியில் ஷகிதாபானு ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், திமுகவில் வாய்ப்பு கிடைக்காததால் திமுக பிரமுகரான மணிமேகலை துரைபாண்டியன் என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்நிலையில் திமுக பிரமுகரான துரைபாண்டியன் தனது மனைவி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தேர்தல் விதிமுறைகளை மீறி பிப்.18ம் தேதி இரவு 11 மணியளவில் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு 1 கிராம் எடையுள்ள தங்கக்காசு எனக்கூறி தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளை காசு கொடுத்து வாக்கு கேட்டதாக தெரிகிறது.
அப்போது, வாக்காளர்களிடம் சுவாமி படம் பொருந்திய போட்டோ ஒன்றை காட்டி தங்கக்காசு பெறுவதற்கு முன்பாக அதன் மீது சத்தியம் செய்து மணிமேகலைக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்குறுதியும் அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை நம்பிய வாக்காளர்களும் தங்கக்காசு வழங்கிய சுயேச்சை வேட்பாளருக்கே தங்களது வாக்குகளை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ஒரு சிலர் தங்கக்காசை எடுத்துக்கொண்டு நேற்று அடகு கடைக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த அடகு கடைக்காரர் இது தங்கம் இல்லை, பித்தளை காசு, தங்க முலாம் பூசியுள்ளனர் எனக் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் அனைவரும் அடகு கடை முன்பாக நேற்று குவிந்தனர். சுமார் 1,500 பேருக்கு வழங்கப்பட்ட மொத்த காசும் போலியானவை என்பதை உணர்ந்த வாக்காளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றும், இதை வெளியே கூறினாலும் எந்தப் பயனும் இல்லையே எனவும் தங்களுக்குள் பேசிக் கொண்டு கவலைப்பட்டனர்.
இதற்கிடையே, சிலர், பித்தளை காசு வழங்கி வாக்குகளை பெற்றதால் 36வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும், சுயேட்சை வேட்பாளர் மணிமேகலை துரைபாண்டின் வெற்றி பெற்றால் அவரது வெற்றி செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சலசலப்பை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து வேட்பாளரின் கணவர் துரைபாண்டியிடம் கேட்டபோது, "எனது மனைவிக்கு வாக்களிக்குமாறு நான் யாருக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கவில்லை. அதற்கான அவசியம் இல்லை. அதிமுகவினரும், எங்களது வெற்றியை விரும்பாத சிலரும் என் மீது வீண் பழி சுமத்தியுள்ளனர்" என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu