வரப்போகிறது சாட்டிலைட் இணையதள சேவை..!
செயற்கைகோள் இணையதள செயல்பாட்டு விளக்கப்படம்.
'இணையதளத்தின் சேவை, இன்றைய கட்டாயத் தேவை' என்ற அளவில் சமுதாயம் மாறிக்கொண்டு இருக்கிறது. கையில் குறைந்தது ஒரு செல்போனாவது இல்லாவிட்டால், அன்றாட வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். செல்போனும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. செல்போனிலும், இணையதள சேவை கட்டாயமாகி விட்டது.
வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்ப, 'யூடியூபில்' வீடியோக்கள் பார்க்க, பணப்பரிமாற்றம் செய்ய, ரெயில், பஸ் டிக்கெட் எடுக்க இவ்வளவு ஏன்? ரோட்டோர காய்கறிகடைகளில் காய்கறி வாங்க வேண்டுமென்றால்கூட 'யுபிஐ' மூலம் பணம் கொடுக்க என்று மட்டுமல்லாமல், மின்னஞ்சல் அதாவது, மெயில் அனுப்பவும், செல்போனில் இணையதள சேவை மிகவும் அவசியமாக இருக்கிறது.
தற்போது நாடு முழுவதும் 120 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் 90 கோடி பேர் இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள். செல்போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கையிலும், இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தற்போது இணையதள சேவைகள், தொலைதொடர்பு நிறுவனங்களின் செல்போன் டவர்கள் மற்றும் பைபர் கேபிள்கள் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன.
இதில் செல்போன் டவர்கள் வேகத்தைவிட 'ஆப்டிகல் பைபர்' என்று கூறப்படும் பைபர் கேபிள்களின் சேவை வேகம் அதிகம். என்றாலும், எல்லா இடங்களிலும் இந்த இணையதள சேவையை பெற முடியாது. செல்போன் டவர்கள் இல்லாத குக்கிராமங்கள், பைபர் கேபிள்கள் இல்லாத இடங்களில் இந்த சேவை இருக்காது அல்லது தடைபடும். குறிப்பாக கடல்பகுதிகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் இணையதள சேவை இருக்காது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உலக பணக்காரரான அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனம் சாட்டிலைட் இணையதள சேவைகளை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. பூமியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இணையதள சேவையை தங்கு தடையின்றி வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனம் புவி சுற்று வட்டப் பாதையில் இப்போது 6 ஆயிரம் சிறு செயற்கை கோள்களை நிறுத்தி வைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கையை 12 ஆயிரமாகவும், அதன் பின்னர் இந்த எண்ணிக்கையை 34 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
உலகம் முழுவதும் இந்த ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சாட்டிலைட் இணையதள சேவை 70 நாடுகளில் உள்ள 26 லட்சம் பேர் பயன்படுத்தி வந்தாலும், இந்தியாவில் இந்த சேவை இல்லை. இந்த சேவை இருந்தால் செயற்கைக்கோள் மூலமாகவே இணையதள சேவை கிடைத்து விடும். செல்போன் டவரோ, பைபர் கேபிளோ தேவையில்லை.
இதுவரை இந்த சாட்டிலைட் சேவைக்கு அனுமதி தாராமல் இருந்த மத்திய அரசாங்கம், இப்போது எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்கப்போகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த நிறுவனத்தின் சாட்டிலைட் இணையதள சேவையை வழங்குவதற்கும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது.
இப்போது எலான் மஸ்க் இந்திய பயணத்தை தள்ளிவைத்து சீனா போன நிலையில் இது சம்பந்தமாக ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த சாட்டிலைட் இணைய தளத்துக்காக அனுமதியை வழங்குவதன் மூலம் இணையதள சேவையில் ஒரு பெரிய புரட்சி ஏற்படும். இணையதள சேவையை பொதுமக்கள் உயர்தரத்திலும், எல்லா இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த தங்கு தடையும் இல்லாமலும் மிக வேகமாக பெறப்போகும் நாள் தூரத்தில் இல்லை என்பதால் சாட்டிலைட் இணையதளம் மிகவும் வரவேற்புக்குரியதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu