விமானங்களுக்கு கருப்பு பெட்டி; ரயில்களுக்கு டேட்டா லாக்கர்..!

விமானங்களுக்கு கருப்பு பெட்டி;  ரயில்களுக்கு டேட்டா லாக்கர்..!
X

டேட்டா லாக்கர் -கோப்பு படம் 

விமானங்களில் கருப்பு பெட்டி இருப்பது போல் ரயிலில் டேட்டா லாக்கர் என்ற அற்புதமான கருவி உள்ளது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் நிலைய அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற ந.வீ.வீ இளங்கோவின் பதிவு... மிகவும் அற்புதமான பதிவு என்பதால், நமது வாசகர்களுக்கு அப்படியே தருகிறோம்.

ஒவ்வொரு முறை இரயில் விபத்து நடக்கும் போதும் அதுபற்றிய ஹேஸ்யங்கள் காரணங்கள் யார் மீது தவறு இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று பல வகையிலும் சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த போக்கு இப்போது அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதியே இரயில்வேயின் பாதுகாப்பு விதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைக்கு ஒரு பதிவில் ஒரு நண்பர்,

இரயில்வே ஓட்டுனர் மெயின் லைனில் செல்ல வேண்டிய ரயிலை லூப் லைனில் அவர் விருப்பப்படி செல்ல வைக்க முடியுமா என்று ஒரு சந்தேகம் கேட்டிருக்கிறார்.

சமீபத்திய விபத்துக்கள் மெயின் லைனில் செல்ல வேண்டிய வண்டி லூப் லைனில் சென்று அங்கு நின்று கொண்டிருக்கும் ரயில் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. டிரைவர் இஷ்டத்திற்கு எந்த லைனிலும் அவர் மாறிச்செல்ல முடியாது. நிலைய அதிகாரி கொடுக்கும் சிக்னல் படியே டிரைவர் செயல்பட வேண்டும்.

தற்போதைய இன்டர்லாக்கிங் முறையில் டேட்டா லாக்கர் என்னும் முக்கிய பாதுகாப்பு கருவி ஒவ்வொரு நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணம் யார் என்று அது துல்லியமாக காட்டி விடும். விமானத்தின் பளாக் பாக்ஸும் இரயில் நிலையத்தின் டேட்டா லாக்கரும் ஒன்றுதான்.

விமான விபத்தை கண்டு பிடிக்க விமான காக்பிட் உரையாடல் விமானம் பறந்த வேகம் உயரம் ஆப்பரேஷன்களின் வரிசை போன்றவற்றை ப்ளாக் பாக்ஸ் மிகத் துல்லியமாக பதிவு செய்து வைத்திருக்கும். அதே போல் இரயில்வே நிலைய டேட்டா லாக்கர் நிலையத்தின் ஒவ்வொரு நொடியிலும் நடந்த செயல்பாடுகள் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஒரு ரயிலுக்கு நிலையத்தின் உள்ளே வர எப்போது சிக்னல் போடப்பட்டது எந்த லைனில் வருவதற்குப் போடப்பட்டது. அப்போது நிலையத்தில் உள்ள ஒவ்வொரு பாயின்டுகளும் எந்த பொஷிசனில் இருந்தன. அந்த ரயில் குறிப்பிட்ட அந்த லைனில் எப்போது வந்து நின்றது. எவ்வளவு நேரம் நின்றது. அது செல்வதற்கு எப்போது சிக்னல் போடப்பட்டது. அது எப்போது சிக்னலைத் தாண்டி சென்றது என்ற விபரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

அந்த ரயில் நிலையத்தில் நுழையும் போது அடுத்த லைன்களில் மற்ற வண்டிகள் நின்று கொண்டிருந்ததாலும், அப்படி எவ்வளவு நேரம் அங்கு நிற்கிறது என்ற விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். பொது மக்களுக்கு ரயில் போக்குவரத்து பாதுகாப்பு சம்மந்தமாக பல சந்தேகங்கள் உள்ளன.

ஒரு லைனில் வண்டி நிற்கும் போது வேறு வண்டி அந்த லைனில் வருவதற்கு சிக்னல் போட முடியாது. போட்டாலும் சிக்னல் செயல்படாது. ஒருலைனில் வண்டி வருவதற்கு அந்த லைனில் உள்ள பாயின்டுகள் சரியாக இணைக்கப்பட்டு எலக்டரானிக் சர்க்யூட் மூலமாக பூட்டப்பட்டால் மட்டுமே அந்த லைனுக்கு சிக்னல் போட முடியும்.

சிக்னல் மெயின் லைனுக்கு போடும் போது பாயின்ட் லூப்லைனுக்கு செட் ஆகி இருந்தால் அந்த சிக்னல் செயல்படாது. அப்படி செயல்பட்டால் அது விபத்து. பெரும்பாலும் சிக்னல் பெயிலியர் அல்லது பாயின்ட் பெயிலியர் சமயங்களில் மட்டுமே இப்படியான மெயின் லைன் லூப்லைன் விபத்துக்கள் நடைபெறுகின்றன.

மேலும் லோகோ பைலட் தன் இஸ்டத்திற்கு மெயின் லைனோ லூப் லைனோ தேர்வு செய்ய முடியாது. சிக்னல் என்ன சொல்கிறதோ அதன்படியே அவர் செயல்பட வேண்டும். அந்த சிக்னலும் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்க வேண்டும்.

ஒரே சமயத்தில் பல வண்டிகள் வாங்கும் நிலை வரும்போது எந்த வண்டியை முதலில் வாங்க வேண்டும்.

வருகின்ற வண்டி அல்லது நிற்கும் வண்டிகளில் எந்த வண்டி எந்த டைரக்சனில் முதலில் செல்ல வேண்டும் என்னும் விபரங்களை ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு செக்சன் கன்டரோலர்கள் சொல்ல வேண்டும். இரயில்வே இயக்கம் என்பது கூட்டு முயற்சி. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் நிலை ஊழியர்கள், சிக்னல் ஊழியர்கள், காங்கி தொழிலாளர்கள், கேரேஜ் மெக்கானிகல் ஊழியர்கள், லோகோ பைலட்டுகள் கார்டுகள் அனைவரின் கூட்டு முயற்சி செயல்பாடு இவற்றினாலேயே இரயில்கள் ஓடுகின்றன.

தண்டவாளம் சரியாக இருக்க வேண்டும். எஞ்சின் சரியாக இயங்க வேண்டும். சிக்னல் நடுநிலையோடு இருக்க வேண்டும். பயணிகள் பயணம் செய்யும் கேரேஜ்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரயில்வே ஊழியர்கள் பயணிகள் அனைவருமே பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். விபத்து காலங்களில் பொதுமக்களும் ஊழியர்களும் பல வகைகளிலும் உதவி செய்கிறார்கள். அனைத்து மக்களும் எதிர்பார்ப்பது பாதுகாப்பான பயணத்தை மட்டுமே. அதற்கு அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story