வாட்ஸ்ஆப் முடக்கத்தால் டெலிகிராம் செயலிக்கு மாறிய 7 கோடி பயனர்கள்
வாட்ஸ்ஆப் செயலியின் முடக்கத்தால் 7 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த அக்.,04ம் தேதி இரவு திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாட்ஸ்ஆப் பயனர்கள் திகைத்தனர்.
இணையப் பிரச்சனை என முதலில் நினைத்த பயனர்கள், சில மணி நேரங்களுக்குப் பின்னரே வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய செயலிகள் முடங்கியதை அறிந்து கொண்டனர். இந்த திடீர் பிரச்சனைக்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப பிரச்சனையால் செயலிகள் முடங்கியிருப்பதாக தெரிவித்தது. இதனால், ஒரே இரவில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்புகளை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. இது எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பதால், டெலிகிராமுக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானமாகும். டெலிகிராம் செயலியைப் பற்றி அறியாதவர்களுக்கு, அதனை அவர்களிடம் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 16.1 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu