"தமிழக வெற்றிக்கழகம்" கொடியை அறிமுகம் செய்துவைத்தார் விஜய்..!

தமிழக வெற்றிக்கழகம் கொடியை அறிமுகம் செய்துவைத்தார் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கொடி பாடல் ஆகியவற்றை இன்று கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

Tamilaga Vetri Kalagam, Actor Vijay, Tamil Nadu Political News

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் கட்சிக்கொடியின் பாடலும் இன்று ( ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து பனையூர் கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். கட்சி கொடி அறிமுகம் செய்வதஜற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  • "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
  • நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்பு உள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்."
  • மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராகக் கடமையாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
  • சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பேரில் உள்ள வேற்றுமைகளைக் கலைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகின்றேன்" என்ற உறுதிமொழியை அவர் வாசிக்க அவரது கட்சித் தொண்டர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.

கொடியின் நிறம்

சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் கால்களைத் தூக்கி நிற்கும் வகையில் அக்கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே வாகை மலர் இடம் பெற்றுள்ளது. வாகை மலர் வெற்றிக்கான மலராகும்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கட்சி அலுவலகத்தில் ஏற்றப்பட்ட கட்சிக்கொடி

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசியலில் களம் இறங்கி இருக்கிறார் விஜய்.

நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது, 'கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தொண்டர்கள் காத்துக் கொண்டிருக்கும் கட்சியின் மாநாட்டு தேதியை, விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறினார். விரைவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மட்டுமின்றி கட்சிக் கொடிக்கான விளக்கம் என்ன என்பதையும் அறிவிக்க இருப்பதாகக் கூறினார்.

முறையான அனுமதியைப் பெற்று அந்த மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்த விஜய், இந்தக் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமை அடைவதாகவும் கூறினார்.

Tags

Next Story