சைக்கிள்களைப் பயன்படுத்த அரசும், தனியார் நிறுவனங்களும் ஊக்குவிக்குமா ?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சைக்கிள்களின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். குறிப்பிட்ட தொலைவுக்கு சென்றுவர எளிமையான, சிறந்த வாகனமாக சைக்கிள் விளங்கியது. சைக்கிள்கள் செல்வதற்கென்றே சாலைகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சாலைகளில் சைக்கிள்களை பயன்படுத்துவோரைக் காண்பதே அரிதாக உள்ளது.
அதற்கு மாறாக பைக், ஸ்கூட்டர், மொபெட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு பெருகியுள்ளது. மேலும் அதிகரித்து வருகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனை ஒவ்வோர் ஆண்டும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் விற்பனை பன்மடங்கு பெருகி வருகிறது.
சைக்கிளைக் காட்டிலும் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதை ஒரு கெüரவமான செயலாகக் கருதும் மனப்போக்கும் இதற்கு ஒரு காரணமாகும். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது தான் மட்டும் சைக்கிளைப் பயன்படுத்துவது அவமானம் என நினைப்போர் அதிகம்.
சைக்கிள்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த காலகட்டங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவாக இருந்தது. விபத்துகளும் குறைவாக இருந்தன. சைக்கிள் விபத்துகளில் ஏற்படும் காயங்களும் குறைவாகவே இருந்தன. ஆனால் இருசக்கர வாகனங்கள் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் அதற்கு நேர்மாறான நிலையே அதிகரித்துள்ளது. உதாரணமாக சாகசம் என்ற பெயரில் பொது இடங்களில் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் செல்வோரால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் சைக்கிளில் சாகசம் செய்தாலும் அதுபோன்ற பெரிய பாதிப்பு ஏற்படுவது குறைவு.
தற்போது அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதில் முக்கியக் காரணமாக கூறப்படுவது இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி பன்மடங்கு அதிகம் என்பதுதான். இந்தியாவின் இறக்குமதியில் கச்சா எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து வரும் நிலையில், இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டினை ஒவ்வொருவரும் குறைத்துக் கொண்டால் பெட்ரோலின் தேவை குறையும். அதற்காக இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல. அவசிய தேவைக்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.
தற்போது அருகிலுள்ள கடைகளுக்குச் செல்வதற்கும், கோயில்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் கூட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவோர் அதிகம். அதுபோல் சுமார் 2 முதல் 3 கி.மீ. தொலைவுக்குச் செல்ல இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற இடங்களுக்கு சைக்கிள்களைப் பயன்படுத்தலாம். இதனால் பெட்ரோல் பயன்பாடு குறையும். அனைவரும் இதேபோன்று செய்தால் பெட்ரோலுக்கான தேவையும், செலவும் குறைந்து வீட்டுப் பொருளாதாரமும், நாட்டுப் பொருளாதாரமும் உயர வழி வகுக்கும்.
சுற்றுச்சூழல் பாதிக்கவும், புவி வெப்பமடையவும் முக்கியக் காரணமாக இருப்பது வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயு என்ற நிலையில், இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டினைக் குறைத்து சைக்கிள்களின் பயன்பாட்டினை அதிகரித்தால் வளிமண்டல அடுக்கில் கரியமிலவாயு கலப்பதை கணிசமாகக் குறைக்கலாம். முன்பு சைக்கிள் பயன்பாட்டின் போது சைக்கிளை ஓட்டிச் செல்பவர்களுக்கு போதிய உடற்பயிற்சியாகவும் இருந்தது. ஆனால் இருசக்கர வாகனங்களால் உடலுழைப்புக்கு வேலையில்லாமல் உடலில் கொழுப்புச்சத்து உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.
சைக்கிள்களைப் பயன்படுத்த அரசும், தனியார் நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியமாகும். சாலைகளில் சைக்கிளுக்கென்று தனிப்பாதை மிகவும் குறைவு. போக்குவரத்து வசதிக்காக மேம்பாலங்களும், ஒரு வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களின் வேகத்துக்கு ஏற்ப உள்ளதே தவிர சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏற்றதாக இல்லை.அதுபோல் சில ஷாப்பிங் மால்களில் சைக்கிள் நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதிகளே இல்லை. சைக்கிள்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவதும் உண்டு. இதனால் சைக்கிள் ஓட்ட விரும்புபவர்களும் தயக்கம் காட்டும் நிலை உள்ளது.
பல்வேறு நற்செயல்களை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யப்பட்டு, துண்டுப் பிரசுரம் வழங்கப்படும் நிலையில் சைக்கிள் பயன்பாட்டினை வலியுறுத்தியும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள அரசு, அரசியல் கட்சிகள், அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவை முயற்சிக்கலாம்.
இவ்வாறு சைக்கிள்களை ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தத் தொடங்கினால் பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஆகியவற்றை மேம்படுத்தலாம். அதேசமயம் போக்குவரத்து நெரிசல், விபத்து உள்ளிட்டவற்றைக் குறைக்கலாம். இதற்கு அரசும் தனியார் நிறுவனங்களும் முன் வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu