நுால் விலை உயர்ந்தாலும் தமிழக ஸ்பின்னிங் மில்கள் திணறுவது ஏன்?
ஸ்பின்னிங் மில் - கோப்புப்படம்
இந்தியாவில் உள்ள மொத்த ஸ்பின்னிங் மில்களில் தமிழகத்தில் மட்டும் 65 சதவீதத்திற்கு மேல் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவின் பருத்தி தேவை 3 கோடியே 50 லட்சம் பேல்கள் ஆகும். தமிழகத்தின் பருத்தி தேவை மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் பேல்கள் ஆகும். ஆனால் தமிழகத்தின் பருத்தி விளைச்சல் 6 லட்சம் பேல்கள் மட்டுமே. ஆக தமிழகத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்கள் தங்களுக்கு தேவையான பஞ்சினை குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றன.
ஒரு லாரியில் அதிகபட்சம் 48 கண்டி பஞ்சு மட்டுமே ஏற்ற முடியும். குஜராத்தில் இருந்து லாரியில் தமிழகத்திற்கு கொண்டு வர வாடகை மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதில் பருத்தி வாங்கித்தரும் வியாபாரிகளுக்கு மில்கள் கமிஷன் தர வேண்டும். ஏற்றுக்கூலி, இறக்கு கூலி என பல்வேறு செலவுகள் உள்ளன.
ஆனால் குஜராத்திலோ, மகாராஷ்டிராவிலோ, மத்தியபிரதேசத்திலோ இருக்கும் ஸ்பின்னிங் மில்களுக்கு இந்த செலவு இல்லை. உள்ளூரிலேயே அவர்களுக்கு தேவையான பருத்தி கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்கள் தான் பஞ்சு கிடைக்காமல் தவிக்கின்றன. இதனால் தமிழக ஸ்பின்னிங் மில்களை பொறுத்தவரை நுால் விலை உயர்வால் பெரும் லாபம் எடுத்து விட முடியாது. பருத்தி விலை உயர்வினை ஈடுகட்ட மட்டுமே இந்த நுால் விலை உயர்வு பயன்படும். தமிழகத்தின் மான்செஸ்டர் என புகழப்படும் கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த அங்கு மில்கள் வைத்திருக்கும் அத்தனை மில் முதலாளிகளுக்கும் இந்த விஷயம் பற்றி முழுமையாகவே தெரியும்.
இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு தமிழகத்தில் நீண்ட இழை பருத்தி விளைச்சலை பெருக்குவது மட்டுமே. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களி்ல் ஆண்டு முழுவதும் நீண்ட இழை பருத்தி சாகுபடி செய்ய தேவையான சீதோஷ்ணநிலை நிலவுகிறது.
அதேபோல் தற்போது விதைகள், விலை, விளைச்சல், நோய் பாதிப்பு குறைவு போன்ற அத்தனையும் விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளன. எனவே தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு தமிழகத்தில் ஸ்பின்னிங் மில்களுக்கு தேவையான பருத்தியில் குறிப்பிட்ட சதவீதமாவது விளைச்சல் எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.
இதன் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும், பணச்சுழற்சியும் அதிகரிக்கும். காரணம் பருத்தி ஒரு வெள்ளைத்தங்கம் என்பதை தமிழக அரசு மறக்கவே கூடாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu