நியூட்ரினோ திட்டத்தை தமிழகம் எதிர்ப்பது ஏன் ? பாதிப்புகள் வருமா?
தேனி மாவட்டம், பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையடிவாரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான பணிகள் நடைபெறுகையில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் 2015ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டு நியூட்ரினோ திட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
நியூட்ரினோ திட்டம் என்பது என்ன?
நியூட்ரினோ ஆய்வகம் (INO), தேனி மாவட்டத்தில், உள்ள மலைகளுக்கு அடியில் சிறப்பாகக் கட்டப்பட்ட குகைகளுக்குள் இருந்து, காஸ்மிக் கதிர்களால் வெளிப்படும் நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் இயற்பியல் சார்ந்த ஒரு அறிவியல் ஆய்வகம் ஆகும்.
இந்த குகைகள் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 1,200 மீட்டர் ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பல குகைகள் இருக்கும். பிரதான குகை 130 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம் மற்றும் 30 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். நியூட்ரினோவை ஆய்வு செய்வதற்காக 50 கிலோ டன் எடையுள்ள காந்தமாக்கப்பட்ட இரும்பு கலோரிமீட்டர் டிடெக்டர் இருக்கும். வளாகத்தைச் சுற்றி 2 கிலோமீட்டர் அணுகு சுரங்கப்பாதையும் கட்டப்படும்.
தேசிய பூங்கா :
இருப்பினும், நியூட்ரினோ திட்ட வளாகம் உள்ள இந்த இடத்தில் இருந்து மற்றொரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான மதிகெட்டான் ஷோலா தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கும் நியூட்ரினோ திட்ட வளாகத்திற்கும் 5 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது. இப்பகுதியில் ஆழமான குகைத் தோண்டும் போதும், துளையிடுதலின் போதும் அதிர்வுகள் ஏற்படும். அதன் காரணமாக திட்டத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்த அதிர்வுகள் அருகில் உள்ள மரங்கள் மற்றும் வன உயிரினங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த திட்டம் முன்மொழியப்பட்ட தளம் தென்னிந்தியாவின் பல்லுயிர் பெருக்கப்பகுதியில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உயிர்வாழும் பிரதேசமாகும். இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பகுதியாக அறிவித்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டம் இந்தப்பகுதியில் செயல்படுத்தப்பட்டால், இந்த பிராந்தியத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்த பிராந்தியத்தின் முழு சுற்றுச்சூழல் அமைப்பும் மீட்டு எடுக்க முடியாத பல மோசமான விளைவுகளை சந்திக்கும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்று. ஆனாலும் இதை பல விஞ்ஞானிகள் மறுக்கின்றனர்.
இந்தத் திட்டம் தொடக்கத்தில் 2011ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது. 2017ம் ஆண்டில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் (NGT) கைவிடப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய வனவிலங்கு வாரியத்திடமும் (NBWL) அனுமதி பெறுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. 2018மார்ச் மாதம், MoEFCC (The Ministry of Environment, Forest and Climate Change)இன் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) சில நிபந்தனைகளின் அடிப்படையில் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படலாம் என்று பரிந்துரைத்தது.
அதேநேரத்தில் இத்திட்டம் தொடங்குவதற்கு முன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (டிஎன்பிசிபி) அனுமதி பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்திய வனவிலங்கு வாரியத்திடம் கட்டாய அனுமதி பெற வேண்டும் என்று என்ஜிடி மீண்டும் வலியுறுத்தியது. அதனால் இந்தத் திட்டம் பல திசைகளிலும் அனுமதி பெற முடியாமல் வழக்குகளில் சிக்கிக்கொண்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறுதலில் பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
சமீபத்திய சர்ச்சை
'பாதுகாக்கப்பட்ட பகுதிகளை' சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களுக்கான தற்போதைய பொதுவான வழிகாட்டுதல்களின்படி, அத்தகைய பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் வரையிலான பகுதி 'பாதுகாக்கப்பட்ட பகுதிகள்' என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், ஈரநிலங்கள் போன்றவைகள் உள்ளடங்கியுள்ளன.
எவ்வாறாயினும், அந்தந்த மாநில அரசாங்கங்கள் எல்லையைச் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட அளவை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க அதிகாரம் பெற்றுள்ளன. இது பிராந்தியத்தின் உணர்திறன் அடிப்படையில் விதிமுறைகளின்படி குறிப்பிடப்பட்ட 10 கிலோமீட்டர் வரம்பை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்குமாறு வரையறுத்துக்கொள்ளலாம். இதனால் பூங்கா எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் வரும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு (National Board for Wildlife) NBWL அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
இருப்பினும், கேரளாவின் பக்கத்திலுள்ள பூங்கா எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் நீளத்தை 'சுற்றுச்சூழல் உணர்திறன்' மண்டலமாக அறிவிக்க கேரள அரசு ஒரு முன்மொழிவை அனுப்பியது. தமிழ்நாட்டின் பக்கத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களைக் குறிப்பிடுவதற்கான அதிகாரம் தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது என்று கேரளா கூறியதால், அதன் பரிந்துரையில் பூங்கா எல்லையின் தமிழ்நாடு பக்கத்தில் பூஜ்ஜிய கிலோமீட்டர்களைக் குறிப்பிட்டது.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்புகள் தொடர்பாக தற்போதுள்ள விதிமுறைகளின்படி, எந்தவொரு பாதுகாக்கப்பட்ட பகுதியின் எல்லையும் வேறு ஏதேனும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் எல்லையுடன் தொடர்புடையதாக இருந்தால் அது தொடர்புடைய அனைத்து மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியின் அகலத்தை முடிவு செய்ய ஆலோசனை செய்வது அவர்களின் கடமையாகும்.
ஆனால், கேரளாவும் தமிழகமும் இணைந்து இதில் செயல்படவில்லை. கேரளா அவர்களுக்குரிய பகுதியை உணர்திறன் பகுதியாக அறிவித்துக்கொண்டது. இந்த பரிந்துரையானது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் கேரளா பக்கத்தில் ஒரு கிலோமீட்டர் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் இருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் பக்கத்தில் பூஜ்ஜியமாக காட்டப்பட்டுள்ளது.
அதனால், இத்திட்டம் முன்மொழியப்பட்ட தளம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களின் கீழ் வரவில்லை. அவ்வாறு இருந்தால் மட்டுமே INO க்கு NBWL இலிருந்து அனுமதி பெறுவது கட்டாயமாகும். இப்போது இந்த தளம் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் கீழ் வரவில்லை என்பதால், NBWL இலிருந்து அனுமதி பெறுவதற்கான தேவையும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது.
முன்னெடுப்பு :
இப்போது NBWL இன் அனுமதிச் சான்றிதழைப் பெறுவதில் இருந்த தடை நீங்கியதால், INO தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் தேனி மாவட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி மட்டுமே பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
நியூட்ரினோ மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்கள் அல்லது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்களால் ஆபத்து எதுவும் இல்லை. உண்மையில், டிரில்லியன் கணக்கான நியூட்ரினோக்கள், நமக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் ஒவ்வொரு நொடியும் நம் உடலை கடந்து செல்கின்றன.
'நியூட்ரினோவால் எந்த ஆபத்தும் இல்லை' : நாபா கே மோண்டல்,
திட்ட இயக்குனர், இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (INO)
நியூட்ரினோ பற்றிய ஆய்வு இன்று அடிப்படை அறிவியலின் வியக்கத்தக்க ஆராய்ச்சி பகுதியாகும். மேலும் இந்தத் துறையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிடுகிறோம். இது உலகளவிலான போட்டிகள் நிறைந்த அறிவியல் திட்டமாகும். எனவே, மக்களின் எதிர்ப்பு எதிர்பாராதது. நியூட்ரினோக்கள் எடை உள்ளவை என்று கண்டுபிடிக்கப்பட்டவுடன், ஒரு அடிப்படையான கேள்வி எழுந்தது: அது நியூட்ரினோக்களின் நிறை படிநிலை. INO இல் முன்மொழியப்பட்ட மின்காந்த அயர்ன் கலோரிமீட்டர் (ICAL) டிடெக்டர் மூலமாக இந்த கேள்விக்கான விடையைத் தீர்க்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். காலப்போக்கில், இந்த நிலத்தடி வசதி இயற்பியல், உயிரியல், புவியியல் மற்றும் நீரியல் ஆய்வுகள் செய்யும் முழு அளவிலான அறிவியல் ஆய்வகமாக உருவாகும்.
உண்மையில் முதன்முதலில் நியூட்ரினோ திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரா பகுதியாகும். ஆனால், முதுமலை வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால், நாங்கள் முன்மொழிந்த இடத்துக்கு அருகில் உள்ள இடமான, தேனி மாவட்டத்துக்கு மாற முடிவு செய்தோம். சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் காரணிகள், புவியியல் நிலைத்தன்மை மற்றும் இயற்பியல் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது முதலில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டது.
நியூட்ரினோக்கள் எப்படியெல்லாம் பயன்படும் :
- அணு பெருக்கத்தைக் கண்காணிக்க
- கனிம மற்றும் எண்ணெய் படிவுகளின் துவாரங்களைக் கண்டறிய பூமியை 'எக்ஸ்-ரே' செய்யும்
- வேகமான உலகளாவிய தொடர்பு .(Fast Communication)
- விஞ்ஞானிகள் இறுதியாக கண்டறிந்த இருண்ட பொருளை (Dark Matter) கண்டறிய
- வேற்றுக்கிரக வாழ்க்கையுடனான தொடர்பு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu