அ.தி.மு.கவின் முக்கியமான மூன்று பிம்பங்கள் உடைந்தது ஏன்?
''ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றியைக் காட்டிலும், அ.தி.மு.க-வின் 3 முக்கிய பிம்பங்கள் உடைந்துள்ளன'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இடைத்தேர்தல் வெற்றியை தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொண்டாடி வருகின்றன. தி.மு.க., தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
''இந்தளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?'' என ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான முத்துசாமியிடம் கேட்டபோது, ''இடைத்தேர்தல் தொடங்கியது முதலே வாக்காளர்களிடம் தி.மு.க கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம், அரசுக்கு நிதிப் பிரச்னை இருந்த போதிலும், பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதேபோல, கொரோனா பேரிடர் காலத்தில், மக்களுக்கு தி.மு.க-வினர் வழங்கிய நலத்திட்டங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்றவை மக்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அ.தி.மு.க அரசை அகற்றி திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஈரோடு மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மேலும் சில திட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டும் என முதலமைச்சரிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவற்றையும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளோம்.
மேலும், மாவட்டம்தோறும் ஆய்வுப் பணிகளுக்கு முதலமைச்சர் செல்வது இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் அயராத உழைப்பு, தி.மு.க அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் உழைப்பு, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பாரம்பரியம் உள்ளிட்ட காரணிகளும் வெற்றிக்கு அச்சாணியாக அமைந்தன'' என்கிறார்.
திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள இடைத்தேர்தல் வெற்றி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பேசினோம். '' ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றியைக் காட்டிலும், அ.தி.மு.க-வின் 3 முக்கிய பிம்பங்கள் உடைந்துள்ளன'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், ''கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு அதிகம். வேளாள கவுண்டர் சமூகத்தின் ஐகானாக அவர் இருக்கிறார். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கான இந்துத்துவ வாக்கு வாங்கியும் அடிபட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வின் அடிப்படை வாக்கு வங்கி என்பது என்பது 30 சதவீதம். ஆனால், அது இங்கு கிடைக்கவில்லை. 'ஆளும்கட்சியினர் பணம் கொடுத்தனர், மக்களை ஆடுகளைப் போல பட்டியில் அடைத்து வைத்தனர்' என்ற புகார் எல்லாம் இருக்கவே செய்கிறது. அதை நான் மறுக்கவில்லை. இடைத்தேர்தல் என்றாலே பல விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலிலும் இதையே செய்தது. ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க தனது அடிப்படை வாக்குவங்கியை இழக்கவில்லை. நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி தனது அடிப்படை வாக்குவங்கியை இழக்கவில்லை. ஆனால், ஈரோட்டில் அ.தி.மு.க தனது அடிப்படை வாக்கு வங்கியை இழந்துள்ளது'' என்கிறார்.
''இடைத்தேர்தலைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமி தனக்குச் சாதகமாக பல விஷயங்களை அமைத்துக்கொண்டார். உதாரணமாக, இரட்டை இலை. வரலாறு காணாத வகையில் பஞ்சாயத்து நடத்தி, இரட்டை இலையை பெற்று விட்டார். இதனால், தி.மு.க சற்று பயந்து போனது என்பது உண்மை. அ.தி.மு.க-வுக்கு யார் யார் எல்லாம் போட்டி வேட்பாளர்களோ அவர்களை எல்லாம் பா.ஜ.க லாபி மூலம் வாபஸ் பெறவைக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு களம் என்பது நன்றாகவே இருந்தது. இதில், அவர் கோல் அடிப்பார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அவர் நடுகோட்டைக்கூட தாண்டவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை'' என்கிறார் ஷ்யாம். ''இடைத்தேர்தல் ஃபார்முலா அனைவருக்குமே தெரியும். இது ஒன்றும் தமிழகத்துக்குப் புதிது கிடையாது. ஆர்.கே.நகர் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாங்கிய வாக்குகள் 90 சதவீதம். அதே ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் நின்றார். டி.டி.வி-யிடம் தோல்வி அடைந்த மதுசூதனன், அடிப்படை வாக்கு வங்கியை இழக்கவில்லை. அதை பெற்றுவிட்டார்.
உதாரணத்துக்குச் சொல்லவேண்டும் என்றால், 1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பர்கூரில் ஜெயலலிதாவே தோல்வி அடைந்தார். ஆனால், அவர் அடிப்படை வாக்குவங்கியை இழக்கவில்லை. அ.தி.மு.க-வின் தோல்வியை எப்படிக் கணக்கிட்டாலும் 30 சதவீதத்துக்கும் கீழே வரமாட்டார்கள். ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் அது உடைபட்டுவிட்டது.
மேற்கு மண்டலம் என்பது எடப்பாடி பழனிசாமியின் கோட்டை. கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயம் அவர் பின் திரண்டுள்ளது என்பன போன்ற பிம்பங்கள் உடைந்துள்ளன. அதேபோல பாஜகவுக்கு சில தொகுதிகளில் மட்டுமே வலிமை உள்ளது. அவர்களுக்குப் பரவலாக வலிமை இல்லை என்பதும் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்துத்துவ வாக்கு வங்கி என்பது அதிமுக வேட்பாளருக்கு கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் அதிமுக பல பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது'' என்கிறார் ஷ்யாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu