முதல்வரின் அரசியல் ஆலோசகர் யார் ... ரகசியத்தை போட்டுடைத்த பொன்முடி
அமைச்சர் பொன்முடி (பைல் படம்)
மனைவி அமைவது எல்லாம் வரம். முதல்வர் அரசியலுக்கும் ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
முனைவா் சாந்தகுமாரி எழுதிய 'கதை சொல்லும் குறள்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. திருக்குறளை கதை வடிவில் மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் இந்த நூலை அவா் எழுதியுள்ளார். இந்த விழாவில் தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, அமைச்சா் பொன்முடி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பொன்முடி பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம், திருவள்ளுவா் சிலை, வள்ளுவா் கோட்டம் போன்றவை உருவாக்கி வள்ளுவத்தையும், வள்ளுவரையும் மக்களிடத்தில் கொண்டு சோ்த்தது திராவிட மாடல் ஆட்சி தான். நிகழ்கல்வியாண்டில் தன்னாட்சி கல்லூரிகளைத் தவிர அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் மொழிப்பாடமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழிப் பாடமாக அமல்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறார். வள்ளுவருக்கு புகழ் சேர்த்தது திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி என்பது எப்பொழுதும் திருக்குறளுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்ப்பது தான்.
குறளில் இருந்து கதை சொன்னால் அதை ரசிக்கலாம். ஆனால் கதையில் இருந்து குறள் சொல்வது ஆற்றல் மிக்கது அல்லவா. இந்த புத்தகத்தில் அழகாக எழுதியுள்ளார். பஸ்களிலும், அரசு பள்ளிகளிலும் திருக்குறளை எழுத சொல்கிறோம். கதை சொல்லி குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டிருக்கும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கே இருக்கும் இருவர் தமிழ்தாய் பாடலை பாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். மனைவி அமைவது எல்லாம் வரம். முதல்வர் அரசியலுக்கும் ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர் அவரது மனைவி துர்கா ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.
அரசியலில் இருக்கும் ஒருவருக்கு, அரசியலில் இல்லாத அவரது மனைவி ஆலோசனை வழங்குவதாக அக்கட்சி அமைச்சர் ஒருவரே வெளிப்படையாக பேசி இருப்பது துர்கா ஸ்டாலின் ஆட்சி, கட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தி உள்ளது. அவரது கணவர் முதல்வர், நல்லாட்சி நடத்த அவர் ஆலோசனை வழங்குகிறார். இது ருசிகரமான விஷயம் தானே எனவும் கட்சியினர் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu