நத்தம் புறம்போக்கில் பட்டா பெற முடியுமா..? தெரிஞ்சிக்குங்க..!

நத்தம் புறம்போக்கில் பட்டா பெற முடியுமா..?  தெரிஞ்சிக்குங்க..!
X

நத்தம் புறம்போக்கு நிலம்- கோப்பு படம் 

கிராமங்களில் புறம்போக்கு நிலங்கள் என்று பொது பயன்பாட்டுக்காக இருப்பதை நாம் அறிவோம். அதில் நத்தம் என்று ஒரு பிரிவு உண்டு. அது எதற்கானது என்பதை அறிவோம் வாருங்கள்.

பொதுவாக நாம் அடிக்கடி கேள்விப்பட்ட பெயர்தான் கிராம நத்தம். கிராம நத்தம் என்பது குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி என்று பொருளாகும். அதேபோல கிராம நத்தம் பட்டா என்றும் நாம் அறிந்திருப்போம். அந்த பட்டா செல்லுபடி ஆகுமா? அதற்கு சட்டம் என்ன சொல்லுது போன்ற விபரங்களை காணலாம் வாங்க.

நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஊரில் தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், பாதைகள், இடுகாடு என பொது பயன்பாட்டு நிலப்பகுதிகளை புறம்போக்கு நிலம் என்று கூறுவது வழக்கம். அதாவது அந்த நிலத்தில் விவசாயம் செய்யமுடியாது. ஏனெனில் இந்த நிலங்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இருக்காது. சிலர் நத்தம் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றி விவசாயம் செய்வதும் உண்டு.

இப்படி பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் பல வகை உண்டு என்றாலும், நத்தம் என்ற வகையில் மட்டும், மக்கள் வீடு கட்டிக்கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. நத்தம் என்றால், கிராமத்தில் குடியிருப்பிற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும். நத்தம் புறம்போக்கு நிலம் என்றால் நத்தம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலம் ஆகும்.

கிராம நத்தம் :

தொடக்க காலங்களில் கிராம நத்தம் சார்ந்த நிலங்களை ஏழை மக்கள் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்து கொள்வதற்கும் ஒதுக்கப்பட்டு வந்தது. அவ்வாறு ஒதுக்கப்படும் நிலத்தை வீடுகள் கட்டி குடியிருக்கலாமே தவிர இந்த நிலங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது.

கிராம நத்தம் நிலத்தை கண்டிப்பாக யாரும் வாங்கலாம். ஆனால், குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் வாங்கலாம். இவ்வாறு இந்த நத்தம் நிலங்களில் வாங்குவது அல்லது பயன்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன. அதனால் நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது. தற்போது நத்தம் பட்டா மாறுதல் செய்யும் வசதியையும் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நடைமுறை நத்தம் பட்டா நிலங்களை வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

பட்டா மாற்றம் :

பட்டா மாற்றம் செய்வதுடன், உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே குறைவான கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் அடையாளச் சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்யலாம்.

அதில்

  • "பட்டா / சிட்டா விவரங்களை பார்வையிட" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் ஒரு புதிய திரை தோன்றும்.
  • அந்த திரையில் உங்களுடைய மாவட்டம்,வட்டம், கிராமத்தின் பெயர், பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர், நிலத்தின் வகை, நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை எவ்வித தவறும் இல்லாமல் பதிவிட வேண்டும்.
  • இதையடுத்து, ஊரகமா? நத்தமா? என்பதையும் குறிப்பிடவேண்டும். இதில் ஊரகம் என்பது வயல் சார்ந்த நிலப்பகுதி ஆகும். நத்தம் என்பது வீடு சார்ந்த நிலப் பகுதி ஆகும்.
  • இறுதியாக, கேப்சா தரப்பட்டிருக்கும். கேப்சாவை அதில் இருப்பதுபோல பதிவிட்டு, "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால், உங்களுக்கான நத்தம் நிலத்தின் பட்டாவை ஆன்லைனில் நேரடியாகவே காணமுடியும்.

நமக்குத் தேவைப்பட்டால், இதனை டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம், தாலுகா அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்பது கூடுதல் தகவல்.

நிலுவை வழக்குகள்:

கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் எழுப்பட்டிருக்கின்றன. இந்த நக்கல் நிலம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகளில் கூறியிருப்பது,

வீட்டு மனையாக தனி நபர் கட்டுப்பாட்டில் உள்ள கிராம நத்தம் நிலங்கள், அரசின் சொத்து அல்ல. கிராம நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை, ஒருவர் விவசாய பயன்பாட்டுக்கு மாற்றியதற்காக மட்டுமே அதை கையகப்படுத்துவதற்கு அரசுக்கு உரிமை இருக்கிறது என்று கருத முடியாது.ஒரு சொத்து கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலையில், அதில் அரசு உரிமை கோர வழி இல்லை.

அரசு புறம்போக்கு நிலம்:

அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கிராம நத்தம் நிலம் ஆகிய இவை இரண்டையும் ஒரே பொருள்படும் வார்த்தைகளாக கருத முடியாது. கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருத முடியாது.அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அந்த நிலத்தில் இருந்து அவர்களை அகற்ற, அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நத்தம் நிலத்தில் வீடு கட்டி குடி இருக்கலாம். அதற்கு பட்டாவும் பெறலாம். பட்டா பெயர் மாற்றமும் செய்யலாம்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்