காவல்துறை தன் கடமையை செய்தது. கல்வித்துறை என்ன செய்யப்போகிறது?
எட்டயபுரம் அரசு பள்ளியில் ஆசிரியரை தாக்கும் பெற்றோர்
எட்டயபுரம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் பாரத் அடித்ததாக கூறி உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் மாணவனின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
எட்டயபுரம் பள்ளி ஆசிரியர்களை அடித்த பிரச்னையில் நான்கு பேர் மீதும் 448, 294 பி, 332, 355, 506 பார்ட் 2 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காவல்துறை செய்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவே இல்லை என்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.
அடிப்படை பிரச்சனை, பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததே. மாற்றுப் பணியில் வேறொரு பள்ளி ஆசிரியர் கடந்த ஜனவரி மாதம் முதல் தான் பிரச்சனை ஏற்பட்ட பள்ளிக்கு வருகிறாராம். அப்படி எனில் இதற்காக துறை உயர்நிலை அலுவலர்கள் என்ன செய்தனர்?
இப்படித்தான் கடந்த பத்தாண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களே நிரப்பப்படாமல் அட்ஜெஸ்மென்ட் வழியில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பிரச்சினை தான் கல்வித்துறையின் மிக முக்கியமான பிரச்சினை. ஆசிரியர்கள் இல்லாத பிரச்சனையை சரிசெய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் அனைத்து அலுவலர்களுக்கும் என்ன தான் பணி?
பள்ளிப் பார்வை உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் பின்னால் ஓடும் கல்வித்துறை அதிகாரிகள் நிஜமாகவே தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் அமர்ந்திருக்கும் குழந்தைகளின் கற்றலுக்கு என்ன செய்கின்றனர்? மனசாட்சியுடன் பணியாற்றுகின்றனரா?
ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் இந்த அதிகாரிகள் கற்பித்தல் பணி செய்யலாமே. ஏன் புதிதாக அரசு இப்படி சிந்திக்கக் கூடாது? வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் செல்லட்டும். மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு சென்று கற்பித்தல் பணி செய்யட்டும். அப்போதாவது கல்வித் துறையில் உள்ள பல பிரச்சனைகள் முடிவுக்கு வருமா என்று பார்க்கலாம். இப்படியான பெற்றோர்களையும் ஊர்மக்களையும் அதிகாரிகள் நேரடியாக சந்திக்கட்டும்.
அப்படி இந்த அதிகாரிகள் சென்று கற்பித்தல் பணியில் ஈடுபடும் போதாவது இவர்கள் சொல்லும் ஆன்லைன் பணி, குழந்தைகளை அதுவும் ஐந்து வகுப்புகளுக்குமான குழந்தைகளை ஒரே ஆசிரியர் வைத்துக்கொண்டு பாடம் நடத்த முடியாமல் திணறும் கஷ்டம் இப்படி எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
எந்த அரசு வந்தாலும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் குறித்து கணக்கில் கொள்வதே இல்லை. ஆட்சியாளர்கள் கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் போக்கில் திட்டங்களை அறிவித்து விளம்பரங்கள் செய்கின்றனர். இந்தத் திட்டம் கொண்டு வந்தோம்.... அந்தத் திட்டம் கொண்டு வந்தோம் என அவர்களே பறை சாற்றிக் கொண்டு புளங்காகிதம் கொள்கின்றனர். அவர்கள் அரசியல் செய்கின்றனர். ஆனால் தரமான கல்வியைக் கொண்டு வர எந்த அரசாவது முயற்சி செய்கிறதா என்பதை மக்களும் உணர வேண்டும்.
ஆனால் வாழ்நாளில் நமது அறுபது வயதுவரை கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் அதிகாரிகளும் இந்த சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்பு பெற்றவர்கள் அல்லவா? பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் உண்மையான கற்றலுக்கு உறுதி செய்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டாமா?
ஆகவே தான் பொதுமக்கள் ஆசிரியர்களை இத்தனை தூரம் அவமானப் படுத்தும் நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. இதனை தடுக்க கல்வித்துறை என்ன செய்யப் போகிறது? என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu