வளர்ப்புக் கிளி கொடுத்த எச்சரிக்கை! சூரல்மலையில் தப்பிய குடும்பங்கள்
வயநாடு பேரழிவு - கோப்புப்படம்
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரும் மழை, அதனை தொடர்ந்து நடந்த நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதுவரை 394 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபடும் நம் ராணுவத்தினர் தினம், தினம் வியக்க வைக்கும் புதுப்புது தகவல்களை அளித்து வருகின்றனர். வெள்ளத்தில் தப்பிய ஒரு மூதாட்டியையும், அவரது பேத்தியையும் மூன்று யானைகள் இரவு முழுவதும் பாதுகாத்து மீட்பு படையினர் வந்து மீட்ட பின்னர் அங்கிருந்து சென்ற நிகழ்வு மீட்பு படை மூலமே வெளியுலகிற்கு வந்தது.
அடுத்து ஆதிவாசிகள் குடும்பத்தை சேர்ந்த பலர் குகைகளுக்குள்ளும், பாறை முகடுகளில் இருந்தும் பல நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒரு பள்ளி ஆசிரியை வெளியிட்ட வீடியோவில், அவருடன் அந்த பள்ளி மைதானத்தில் சைக்கிள் ஒட்டி விளையாடிய மாணவிகள் உட்பட 9 மாணவிகள் மண்ணுக்குள் புதைந்து விட்டனர் என கண்ணீருடன் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இதனை எல்லாம் விட வியக்க வைக்கும் ஒரு சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது. இயற்கையின் ரகசியங்களை பறவைகளும் விலங்குகளும் அறிந்துகொள்ளும் திறன்பெற்றிருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் நடந்தள்ளது.
வயநாடு மாவட்டம் சூரல்மலை என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்திற்கு வளர்ப்புக் கிளி கொடுத்த எச்சரிக்கையால் பல குடும்பங்கள் தப்பிய செய்தி வெளியாகியிருக்கிறது.
வினோத் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த கின்கினி என்ற கிளிக்கு வரப்போகும் நிலச்சரிவு குறித்து தெரிந்திருக்கிறது. கிளி வினோத்துக்கு எச்சரிக்கை கொடுத்ததன் விளைவாக அவர்களது குடும்பம் மட்டுமல்லாமல், அவரது நண்பர்கள், அண்டை வீட்டாரும் பாதுகாப்பாக வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் வெளியேறிய பின்னர், அப்பகுதி நிலத்திற்குள் மூழ்கியுள்ளது. அந்த கிளி மட்டும் சரியான நேரத்திற்கு எச்சரித்து இருக்காவிட்டால், நாங்களும் மேலும் பலரும் மண்ணுக்குள் புதைந்திருப்போம் என வினோத் தெரிவித்துள்ளார். இந்த ஆச்சர்யம் தமிழக, கேரள மாநிலங்களில் மிகப்பெரிய வியப்பினை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu