சிவகாசி பேருந்து நிலையத்தில் புதிய குளியலறை, கழிப்பறை கட்டுவதற்கு பூமி பூஜை
சிவகாசி பேருந்து நிலையத்தில் புதிய குளியலறை, கழிப்பறை கட்டுவதற்கு பூமி பூஜையை நடத்தி வைத்த மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம்.
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி 1920 ல் மூன்றாம் நிலை நகராட்சியாக செயல்பட்டது. 21/08/1978 இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 01/10/1978 ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1998ல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2013ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் துறை அரசாணை எண். 127 , 16.12.2021 தேதியிட்ட அரசாணையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைந்து 21.10.2021 முதல் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகரின் மையப் பகுதியில் என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஆட்சியின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது. புதியதாக கட்டப்பட்டுள்ள கடைகளின் பின் பகுதியில், இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தண்ணீர் வசதி இல்லாமல் கட்டப்பட்ட இந்த கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. கழிப்பறையை சமூக விரோதிகள் மது குடிக்கும் இடமாக மாற்றியிருந்தனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்குள் இலவச சிறுநீர் கழிப்பிடம் கூட இல்லாமல் பயணிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதனால் பேருந்து நிலையத்திற்குள் ஆங்காங்கே சிறுநீர் கழித்து சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. உடனடியாக பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை மற்றும் குளியலறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து சிவகாசி பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறை மற்றும் குளியலறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர்கள் சூரியா, சேவுகன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu