ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பக்தர்களுக்கான வசதிகள் பற்றி ஆய்வு செய்தார் .
சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருக்கிறது. பிரசித்தி பெற்ற இந்த மலைக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகின்றனர்.
ஆடி அமாவாசை நாள் என்பது முன்னோர்களுக்கு திதி வழங்கும் முக்கியமான நாளாகவும், சிவன் கோவில்களில் விளக்கேற்றி வணங்கிடும் முக்கிய நாளாகவும் இருந்து வருகிறது. சதுரகிரிமலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை, ஆடி அமாவாசை நாளில் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) முதல், வரும் 17ம் தேதி (வியாழன் கிழமை) வரையிலான 6 நாட்களும், பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கமாக பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிப்பதற்காக சில ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உடனடி மருத்துவ வசதி, பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது. அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சதுரகிரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க கூடுதல் போலீசாரை நியமிப்பது குறித்த பல்வேறு ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் உட்பட வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu