திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயால் பரபரப்பு
திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீயால் பரபரப்பு
திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயால் பக்தர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ளது மூவரை வென்றான் கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ள மலைப் பகுதியில் மிகப் பழமையான மலைக் கொழுந்தீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது.
மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு மலைக் கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு பின் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென்று நேற்று இரவில் காட்டுத் தீ பற்றி எரியத் துவங்கியது. உடனடியாக மூவரை வென்றான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காட்டுத்தீ பரவல் குறித்து தகவலறிந்த திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் காட்டுத் தீ கட்டுப்படுத்தி அணைக்கப்பட்டது.
நாளை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவம், பக்தர்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu