திருவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்தேரோட்டம் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்
திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில், பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலின் ஆடிப்பூரம் தேரோட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, ஆடிப்பூரம் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு தேரோட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆடிப்பூரம் தேரோட்டம் அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தேரோட்டம் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் நாளில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடக்க இருப்பதால் வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றது போல அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu