சதுரகிரி மலையில் நடந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சதுரகிரி மகாலிங்கம் மலை
சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை திருவிழாவில் 86 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 6 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது.
ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்ற 6 நாட்களில், சுமார் 86 ஆயிரம் பக்தர்கள், மலைக் கோவிலுக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்துள்ளார்கள் என்று கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சதுரகிரிமலைப் பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்ததால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அடிவாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டனர். இயற்கை இடையூறு ஏற்படாமல் இருந்திருந்தால், பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. மலைப் பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், பக்தர்கள் சற்று சிரமப்பட்டாலும் நீரோடைகளை கடந்து சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.
நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டு, பாதுகாப்பாக அடிவாரப்பகுதிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆடி அமாவாசை திருவிழா, இந்த ஆண்டு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பூஜைகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் உள்ள வனத்துறை நுழைவு வாயில் நேற்று மாலை மூடப்பட்டது. வரும் ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் மற்றும் ஆடி மாத பௌர்ணமி தரிசனத்திற்காக ஆகஸ்ட் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) பிரதோஷம், 11ம் (வியாழன் கிழமை) பௌர்ணமியன்றும், சுந்தரமகாலிங்கம் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu