திருவில்லிபுத்தூரில், கண்மாய் உடைந்து வீடுகளை சூழ்ந்த மழைநீர்..!
கண்மாய் உடைந்து மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்குள்ளவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் தீயணைப்பு வீரர்கள்.
திருவில்லிபுத்தூர் அருகே கண்மாய் உடைந்து, வெள்ளநீரில் வீடுகள் மூழ்கின. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருந்த முதிய தம்பதியை பத்திரமாக சிவகாசி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருவில்லிபுத்தூர் :
கண்மாய் உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. வெள்ளநீரில் மூழ்கிய வீட்டில் சிக்கியிருந்த வயதான தம்பதியை, சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்றும் இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது. பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், அச்சம்தவிர்த்தான் அருகேயுள்ள அணைத்தலைப்பட்டி பகுதியில் உள்ள பெரிய கண்மாய் நிறைந்தது.
கண்மாய் நிறைந்ததால் திடீரென்று கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மீட்டுச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் அணைத்தலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (62), இவரது மனைவி சுப்புலட்சுமி (58) இருந்த வீட்டை வெள்ளநீர் சூழ்ந்தது.
வெள்ளநீரில் இருந்து இவர்கள் இருவரும் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வெள்ளநீரில் சிக்கியிருந்த தம்பதியை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் பாதுகாப்பான இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu