நெல் கொள்முதல் தாமதம்: சாலையில் டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் மறியல்
கான்சாபுரம்- அத்திக் கோயில் பகுதியில் டிராக்டரை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் சுமார் 7400 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் தற்போது அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கான்சாபுரம் பகுதியில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாமல் கால தாமதம் செய்வதால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 50 டன் அளவிற்கு நெல் குவிந்து கிடக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கான்சாபுரம்- அத்திக் கோயில் பகுதியில் டிராக்டரை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கூடுதலாக நெல் தூற்றும் இயந்திரம் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாப்பட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தை கை விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu