சீனாவிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு

சீனாவிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு
X

இலந்தைகுளம் பகுதியில், சிவகாசி சுகாதார துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது 6 வயது மகளுக்கு தொற்று உறுதி

வத்திராயிருப்பு அருகே சீன நாட்டிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று காலை, சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிகள் விமானத்தில், பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனையில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும், கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தாய், மகள் இருவரும் அவர்களது வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கு தொற்று பரிசோதனைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இலந்தைகுளம் பகுதியில், சிவகாசி சுகாதார துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இது குறித்து துணை இயக்குநர் கலுசிவலிங்கம் கூறும்போது, இந்தப்பகுதியில் தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். மேலும் தாய், மகள் இருவருக்கும் உருமாறிய பிஎப்- 7 வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை கண்டறிவதற்காக, அவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!