தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
X

டி.ஜி.பி. சைலேந்திரபாபு 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலை பகுதியில் செயல்படும், ராஜபாளையம் 11வது பட்டாலியன் படைப்பிரிவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இந்தியா அளவில் புலன் விசாரணைகளில், தமிழக காவல்துறை முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்த காவல்துறையினருக்கான, தேசிய அளவிலான பணித்திறன் போட்டிகளில், தமிழக காவல்துறை 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 11 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மேலும் தேசிய அளவில் சி.ஆர்.பி.எப், எல்லை பாதுகாப்புப்படை மற்றும் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக போலீசார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 1995 - 96 ஆண்டுகளில், ராஜபாளையம் பகுதியில் மிகப்பெரிய ஜாதி கலவரம் நடைபெற்றது. அந்த கலவரத்தில் 48 கொலைகள் நடந்தது. அப்போது நான் ராஜபாளையம் கேம்பில் 8 மாதம் தங்கி இருந்து பணியாற்றி இருக்கிறேன்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பட்டினால் தமிழகத்தில் ஜாதி, மத கலவரங்கள் எதுவும் நடைபெறவில்லை. வடமாநில கொள்ளை, தொடர் கொலை உள்ளிட்ட எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை.

தமிழகம் அமைதியாக இருப்பதற்கு காரணம் பட்டாலியன் படைப்பிரிவு. காவல்துறைக்கு பக்கபலமாக, ராணுவம் போன்று உறுதியாக இருப்பது பட்டாலியன் படைப்பிரிவு. நான் டி.ஜி.பியாக பொறுப்பேற்ற பின்பு ஆயிரம் சார்பு ஆய்வாளர்கள், 10 ஆயிரம் காவலர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சார்பு ஆய்வாளர் பணிக்கு புதியதாக 444 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 600 காவலர்கள் பணிக்கு தேர்வுகள் முடிந்துள்ளது.

வரும் மே மாதத்தில் புதியதாக 600 சார்பு ஆய்வாளர்களும், 3 ஆயிரத்து 600 காவலர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றபின்பும் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் காவலர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே காவலர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கு பெற வேண்டும் என்று பேசினார்.

மேலும் தமிழக காவல்துறையில் மகளிர் போலீசார் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது. அதில் மகளிர் போலீசாருக்கு என்று 9 சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில், போக்சோ வழக்குகளில் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால், குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. போக்சோ குற்றங்களை முழுமையாக தடுப்பதற்கு பொது மக்களிடம், காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!