சதுரகிரி மலைப் பாதையில் காட்டுத் தீ: பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை
பைல் படம்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். புரட்டாசி மாத மகாளய அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக, ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியையும், ஆனந்தவள்ளி அம்மனையும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சதுரகிரிமலையின் கிழக்குப் பகுதியான சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டு, வனப்பகுதியின் பல இடங்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மலைக்கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவிலுக்கு செல்வதற்காக வனத்துறை நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்களிடம் வனப் பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால் அனுமதி கிடையாது என்று வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர். வனத்துறை நுழைவு கேட் திறக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் உள்ள நுழைவு வாயில் முன்பு நின்று சுவாமியை வணங்கிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இன்று விடுமுறை நாளாக இருப்பதால், ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்காக காத்திருக்கின்றனர். மலைப் பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை ஊழியர்கள் கடும் முயற்சி செய்து வருகின்றனர். தீ முழுமையாக அணைந்தால் மட்டுமே, கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் கூறினர்.
வரும் 4ம் தேதி (செவ்வாய் கிழமை) ஆயுதபூஜையன்றும், மறுநாள் 5ம் தேதி (புதன் கிழமை) விஜயதசமியன்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வரும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu