ஆடி அமாவாசைக்கு சதுரகிரி போறீங்களா? வனத்துறை சொல்றத கேளுங்க.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சர்வ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
சதுரகிரி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக மலைப்பகுதியில் பெய்த மழையினால் ஓடைகளில் லேசான நீர்வரத்து ஏற்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாமல் சதுரகிரி மலைப்பகுதி மிகவும் வறண்டு காய்ந்து கிடந்தது.
மலையில் இரண்டு முறை தீ விபத்தும் ஏற்பட்டு வனத்துறையினரால் அணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களை அனுப்புவதில் வனத்துறையினர் மிகுந்த அச்சமடைந்து இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இரவு 6:00 மணிக்கு மேல் சதுரகிரி கோயில் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் சாரல் மழை பெய்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடைகளில் குறைந்த அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
இன்று முதல் தினமும் காலை 05:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும் நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கவும், முதியவர்கள், உடல் கோளாறு உடையவர்கள் மலை ஏறுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தானிப்பாறை மலையடிவாரம், மந்தித்தோப்பு, மாவூத்து பகுதிகளில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேர மருத்துவ உதவி மையமும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மதுரை மாவட்ட மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபடுகின்றனர்.
108 ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவ குழு, ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகளவில் தங்கும் தோப்புகளின் கிணறுகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, மருத்துவ துறை உட்பட பல்வேறு அரசு துறை சார்பில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் மலையேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று திடீரென விருதுநகர், தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதி, ஸ்ரீவில்லிபுத்துார் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் வனத்துறையின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும். வனத்துறை வழிகாட்டுதல்கள் இல்லாமல் மலையேறக்கூடாது என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu