சதுரகிரி மலையில் பிப்.18ம் தேதி சிவராத்திரி பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி மலையில் பிப்.18ம் தேதி சிவராத்திரி பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி
X

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி (கோப்பு படம்)

சதுரகிரி மலையில் பிப்.18ம் தேதி சிவராத்திரி பூஜைக்கு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுரகிரிமலையில், சிவராத்திரி தினத்தன்று தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இரவிலும் தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரிமலை மகாலிங்கம் சுவாமி கோவில். இக்கோவிலுக்கு மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சதுரகிரிமலை மகாலிங்கம் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வரும் 18ம் தேதி (சனிக்கிழமை) மாசி மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி நாளாகும். சதுரகிரிமலைக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே மலைக் கோவிலுக்கு, பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். மேலும் அனுமதி வழங்கப்படும் நாட்களில், மலையடிவாரப் பகுதியிலிருந்து காலை 7 மணியில் இருந்து, நன்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

வரும் சனிக்கிழமை மகா சிவராத்திரி நாளில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல், பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும், என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சிவன் கோவில்கள் அனைத்திலும், சிவராத்திரி நாளன்று விடியவிடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். எனவே சதுரகிரிமலையில் உள்ள மகாலிங்கம் சுவாமி கோவிலில், சிவராத்திரியன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில், மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மகா சிவராத்திரி அன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிமலைக்கு வந்து மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு வசதியான போக்குவரத்து ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியமான பணிகளை மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

மகா சிவராத்திரி நாளில் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் காலையில் இருந்து, இரவு வரை பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் என்று பக்தர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து மக்கள் சிவனை வழிபடுவார்கள் என்பதால் அன்றைய தினம் இரவில் நேரகட்டுப்பாடு இல்லாமல் விடியும் வரை அனுமதி வழங்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா