சிவகாசியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறைப்பிடிப்பு

பைல் படம்
சிவகாசியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியின் பல இடங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளின் மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென்று மோதி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
கடந்த வாரம் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர், சாலையில் திரிந்த மாடு மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துகளை தடுக்கும் வகையில், சாலைகளில் திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து நேற்றிரவு, சிவகாசி தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சிவகாசி, சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், காரனேசன் காலனி பகுதியில் திடீர் ஆய்வு செய்து சாலைகளில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை பிடித்தனர். பிடிபட்ட மாடுகளை திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு, சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu