திருவில்லிபுத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை
திருவில்லிபுத்தூரில் பாதயாத்திரை தொடர்ந்த பாஜக தலைவர். அண்ணாமலை
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார் பாஜக தலைவர் அண்ணாமலை .
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று தனது, நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் எழுதியிருப்பவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார் திருவில்லிபுத்தூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தில் ஈடுபட்டார். முன்னதாக திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ஸ்ரீசடகோபராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதனையடுத்து நடைபயணத்தை துவக்கிய அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது: தற்போது தமிழகத்தில் சனாதனத்திற்கு எதிராக குரல் எழுந்துள்ளது. சனாதனத்தை ஒழிப்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருந்தால் தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் மாற்றம் வரும். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தமிழக அரசின் முத்திரை சின்னமாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை முதலில் மாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அதற்கு ஒத்துக்கொள்வாரா, முடிந்தால் அரசு முத்திரையை மாற்றிப் பாருங்கள்.
கோவில்களுக்கு செல்பவர்களை கேலி செய்யும் உதயநிதி ஸ்டாலின், அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் கோவில்களுக்கு செல்வதை மட்டும் ஏன் கூற மறுக்கிறார். இதே திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் திருப்பாவையின் 30 பாடல்களை பாடினார். இது தான் சனாதனம். அனைத்து மக்களையும், அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்வது தான் சனாதனம். ஆனால் இவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு, பெருமை மிகுந்த கிறிஸ்தவன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு, சனாதன தர்மத்தை பேச தகுதியில்லை. இந்து மதத்தை மட்டுமல்ல இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை வேரறுப்போம் என்று உதயநிதி கூறியிருந்தாலும் அதனை கண்டிக்கும் முதல் குரல், கண்டன குரல் என்னிடமிருந்து வரும்.
ஜனாதிபதி தேர்தலில் பட்டியல் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை இவர்கள் ஆதரிக்கவில்லை. தற்போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவையும் இவர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் எல்லோரும் சமம் என்று பேசி வருகின்றனர். வரும் 18ம் தேதி சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. அதில் பாரதம் என்ற பெயர் மாற்றம் வருகிறதா, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பு வரப்போகிறதா என்று எதுவும் தெரியாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய்வதற்கு மத்திய அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதனை பாஜக கட்சி வரவேற்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியே, தான் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று எழுதியுள்ளார். இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுக கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.தேர்தல் நேரத்தில், எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என்று கூறி ஒட்டுகளை வாங்கி விட்டு, தேர்தல் முடிந்த பின்பு சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறுவது தான் திமுகவின் கொள்கை.
உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், வரும் 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல்களை சனாதன தர்மத்திற்கான தேர்தலாக வைத்து கொள்வோம். நீங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளியுங்கள். நாங்கள் சனாதன தர்மத்தை காப்பாற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறோம். மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்றார் அண்ணாமலை. நடை பயணத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக மாவட்ட தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கோபால்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu