திருவில்லிப்புத்தூரில் திமிங்கல எச்சம் கடத்தல்..! 5 பேர் கைது!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, திமிங்கல எச்சத்தைக் கடத்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை, வனத்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து விருதுநகருக்கு ஒரு கும்பல் திமிங்கல எச்சத்தை கடத்தி வருவதாக, வன பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மதுரை வனக் காவல்நிலைய உதவி வனப்பாதுகாவலர் மனிஷாஅலிமா தலைமையில், வனப்பாதுகாப்பு படையைச் சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில்ராகவன் உள்ளிட்டவர்கள் திருவில்லிபுத்தூர் - விருதுநகர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 இருசக்கர வாகனங்களில், திமிங்கல எச்சத்தை கடத்தி வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (40), பத்மகுமார் (34), விருதுநகரைச் சேர்ந்த மனோகரன் (58), ராஜமன்னார் (62), தர்மராஜ் (54) ஆகிய 5 பேரையும் வனப்பாதுகாப்பு படையினர் மடக்கி கைது செய்தனர். அவர்களிடமிருந்த 16 கிலோ திமிங்கல எச்சத்தையும், 2 இருசக்கர வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து திமிங்கல எச்சம் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரும் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடல்வாழ் உயிரினமான திமிங்கலம் மீனின் உடல் உறுப்புகள் மற்றும் கழிவுகள், எச்சம் உள்ளிட்டவைகள் மருத்துவ குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. மேலும் அரபு நாடுகளில், வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காக திமிங்கலத்தின் எச்சம் சேர்க்கப்படுவதாகவும், திமிங்கல எச்சம் சேர்க்கப்பட்ட வாசனை திரவியம் நல்ல நறுமணத்துடன் இருப்பதால் இதற்கான விலை மிகவும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. திமிங்கல எச்சத்திற்கான தேவை அதிகம் இருப்பதால், இதனை கடத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu