சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல ரூ. 9 லட்சத்தில் சாய்தள வசதி

சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல  ரூ.  9 லட்சத்தில் சாய்தள வசதி
X

சிவகாசி அருகே, மாற்றுத்திறனாளிகள் பள்ளியில்  9 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாய் தள பாதை வசதி.

ராம்கோ சிமெண்ட்ஸ் சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்த சாய்தள வசதியுடன் பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியில்,சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளி உள்ளது. இந்தப்பள்ளிக்கு, ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், சுமார் 9 லட்சம் ரூபாய் செலவில் பேவர் பிளாக் சாலை மற்றும் சாய்தளம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவன கணக்கு மற்றும் நிர்வாக உதவி தலைவர் மணிகண்டன், எல்வின் நிலைய நிர்வாகி தயாளன் பர்னபாஸ், தலைமை ஆசிரியர் ஜோசப்தினகரன், ஆயர் ஸ்டீபன்வேதராஜ், பொறியாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எல்வின் நிலைய நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்:

அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும். அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத் திறனாளிகள். இவர்களின் உரிமைகளை காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியின்போது இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும் பிறரைச் சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவே தான், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தள பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத்தளங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத்துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும். "சமூகப் பதிவு அமைப்பு" மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். இப்படி ஏராளமான திட்டங்களை கலைஞர் வழியில், நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil