குடிபோதையில் தம்பி கொலை: அண்ணன் கைது.

குடிபோதையில்  தம்பி கொலை: அண்ணன் கைது.
X
வீட்டிலிருந்த 3 பேரும் வழக்கம் போல குடி போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி்க் கொண்டனர்

வத்திராயிருப்பு அருகே, குடிபோதையில் அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி. தம்பியை தாக்கி கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன் (33), வேல்முருகன் (28). இவர்கள் 3 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மூன்று பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

இதில் மணிகண்டன், விக்னேஷ்வரன் ஆகிய இரண்டு பேருக்கும் திருமணம் நடந்துள்ளது. வேல்முருகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மணிகண்டன், விக்னேஷ்வரனின் குடிப்பழக்கத்தால் இவர்களின் மனைவிகள் இவர்களுடன் சேர்ந்து வாழாமல் தங்களது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இதனால் அண்ணன், தம்பிகள் மூன்று பேரும் தங்களது தாயார் சுந்தரேஸ்வரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தினமும் மது போதையில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் வீட்டிலிருந்த 3 பேரும் வழக்கம் போல குடி போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி்க் கொண்டனர். அப்போது வீட்டிலிருந்த அவரது தாயார் இவர்களின் சண்டையை தீர்க்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் மணிகண்டன் தாக்கியதில் வேல்முருகன் காயமடைந்தார். காயமடைந்த அவரை விக்னேஷ்வரன், வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் மருத்துவர்கள் அறிவுரையை ஏற்காமல் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மணிகண்டன், வேல்முருகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாய் என்று கேட்டு விக்னேஷ்வரனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த விக்னேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுந்தரேஸ்வரி, விக்னேஷ்வரன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைநந்தார். இது குறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் வரனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணன் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.குடி போதை தகராறில் உடன் பிறந்த தம்பியை, அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!