காவல் துறையின் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

காவல் துறையின் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி
X

ராஜபாளையத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி:

இதையொட்டி நடந்த ஓவிய கண்காட்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்துகளை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து காவல் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, நடந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில், போக்குவரத்து காவல் துறையினர், பெண் காவலர்கள், காவல் துறையினர், தன்னார்வ அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பழைய பேருந்து நிலையம் எதிரே இருந்து தொடங்கிய பேரணியை, போக்குவரத்து ஆய்வாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு புறப்பட்ட பேரணி தென்காசி சாலை, காந்தி சிலை, தெற்கு காவல் நிலையம், ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி. அலுவலகம், காந்தி கலைமன்றம், சொக்கர் கோயில் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலை வழியாக வந்து டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

பேரணியை தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடைபெற்றது.நகரில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் என 9 பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இக் கண்காட்சியில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.இந்த கண்காட்சியில், டிஎஸ்பி ப்ரீத்தி கலந்து கொண்டு ஓவியங்களை பார்வையிட்டார்.

ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவர்களுக்கு குற்றப்பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. மணிவண்ணன் பரிசு வழங்கி பாராட்டினார்.பின்னர், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.. உடன், ஊர்காவல் படையின் மதுரை சரக துணை தளபதி ராம்குமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future