மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகளை வெட்டிய 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, கைதிகளை வெட்டிய வழக்கில் சிக்கிய 6 பேர்
விருதுநகர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, கைதிகளை வெட்டிய வழக்கில் சிக்கிய 6 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம், திண்டுக்கல் கொலை சம்பவத்தில் கைதான யுவராஜ் (29), விக்னேஷ் (33) ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையறிந்த எதிர்தரப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு, சிகிச்சை பெற்று வந்த யுவராஜ், விக்னேஷ் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயன் (30), பிரபாகரன் (30), அழகர்சாமி (23), சரவணபாண்டி (28), போத்திராஜன் (24), தங்கமலை (27) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu